வினையியல்
[ வினைச்சொற்களின் இலக்கணம் உணர்த்துவது ]

வினைச்சொல்
தெரிநிலை வினைச்சொல்லின் பொது இலக்கணம்

 
320செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ்
செய்பொரு ளாறுந் தருவது வினையே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் = கருத்தாவும் காரணமும் இடமும் செயலும் காலமும் செயப்படுபொருளும் ஆகிய அறுவகைப் பொருளையும், தருவது வினை = தருவது தெரிநிலை வினைச்சொல்லாம்.

வினை என்றது ஆகுபெயர்.
நட வா முதலியன எல்லாம் தழுவுதற்குச் செய் என்றார்.

செய்பவன் என ஆண்பாலிலே சொன்னாரேனும், "ஒருமொழி ஒழிதன் னினங்கொளற் குரித்தே " என்பதனால் , ஐம்பாலும் கொள்க.

வனைந்தான் என்புழிக் , குயவனாகிய செய்பவனும், மண்ணாகிய முதற்காரணமும், தண்ட சக்கரம் முதலிய துணைக்காரணங்களும் வனைதற்கு ஆதாரமாகிய இடமும், வனைதற்கு முதற் காரணமாகிய செயலும், இறந்தகாலமும், குடம் முதலிய செயப்படுபொருளும் தோன்றுதல் காண்க.

ஆறும் என்னும் முற்றும்மையை உயர்வுசிறப்பு உம்மையாக்கி , இழிந்தன சிலவுள அவையும் வேண்டுமேல் கொள்க எனப் பொருளுரைத்து , இன்னதற்கு , இது பயன் என்பவைகளும் கூட்டிக் கொள்க அவை , பிறர்க்கு வனைந்தான் , பொருள் கருதி வனைந்தான் என வரும் . இவ்விரண்டும் ,ஏதுவின் பாற்பட்டுக் கருவியுள் அடங்கவும் பெறும் ஆதலால் , இழிந்தன ஆயின .

இன்னும் ஆறும் தருவது வினை என்றதற்கு , "முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும் " என்னும் சூத்திரத்தால் இத்தொகையில் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொருளுரைத்துக் கொள்க . கொடி ஆடிற்று என்புழி , ஆடுதல் வினைக்குச் செயப்படுபொருள் குறைந்து வந்தது .

முற்றுவினைகளிலே பகுதியால் செயலும் , விகுதியால் செய்பவனும் , இடைநிலை முதலியவற்றால் காலமும் , பெயரெச்ச வினையெச்சங்களிலே இம்முறையே செயலும் காலமும் வெளிப்படையாகவும் , மற்றவை குறிப்பாகவும் தோன்றும் எனக் கொள்க .

1