வினையியல்

பெயரெச்சம்
செய்யும் என் எச்சத்திற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி

 
341செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல்
உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறலும் = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயர் எச்சத்தினுடைய இறுதியிலுள்ள உயிர்மெய் கெடுதலும், செய்யுளுள் உம் உந்து ஆகலும் = செய்யுளிடத்து உம் விகுதி உந்து எனத் திரிதலும், முற்றேல் உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உள- அது முற்றாயின் அதன் இறுதி உயிராயினும் உயிர் மெய்யாயினும் கெடுதலும் உளவாம்.

செய்யுளு ளும்முந்தாம் எனவே, மற்றவிதிகள் வழக்குச் செய்யுள் இரண்டு இடத்துமாம் , என்பதும், முற்றேல் எனவே, செய்யும் என்னும் பெயரெச்சம் முற்றுவினையுமாம் என்பதும் பெற்றாம்.

1. ஆகும்பொருள் = ஆம்பொருள், போகும் போது = போம் போது என வழக்கினும் , "ஆம்பொருள்க ளாகுமவை யார்க்குமழிப் புண்ணாவாம் ", "வாம் புரவி வழுதி" எனச் செய்யுளினும் செய்யும் என் எச்சத்து ஈற்று உயிர்மெய் கெட்டன. இவை மகர ஒற்று நிற்றலின், வினைத்தொகை ஆகா என்க.

2. "தென்கடற் றிரைமிசைப் பாயுந்து," "நீர்க்கோழி கூப்ப்பெயர்க்குந்து" எனச் செய்யுளில் பாயும், என்பது பாயுந்து எனவும் , கூப்பெயர்க்கும் என்பது கூப்பெயர்க்குந்து எனவும் உம் உந்தாயின.
3. அஃதாம் , இவைபோம் என வழக்கில், ஆகும் போகும் என்பன முற்றாய இடத்து, ஆம், போம் என ஈற்று உயிர்மெய் கெட்டன . "சாரனாடவென் றோழியுங் கலுழ்மே," "அம்பலூரு மவனொடு மொழிமே" எனச் செய்யுளில் , கலுழும், மொழியும் என்பன, முற்று ஆயி இடத்துக், கலுழ்ம் மொழிம் என உயிரும் உயிர்மெய்யும் கெட்டன.

செய்யும் என்னும் முற்று என்றாயினும் செய்யும் என்னும் ஏவல்முற்று என்றாயினும் விதவாது , பொதுமையின் முற்றேல் என்றமையின். "மாமறை மாக்கள் வருகுவங் கேண்மோ." "முதுமறை யந்தணிர் முன்னிய துரைமோ" எனக்கேளும் உரையும் என்னும் ஏவல்முற்றும் இவ்வாறு உயிரும் உயிர்மெய்யும் கெட்டு வருதல் கொள்க. இவை இங்ஙனம் ஆதலால், "சொற்றொறு மிற்றிதன் பெற்றி"(சூத்திரம்.461) என்னும் சூத்திரத்தால், ஆடுவாமோ என்னும் தன்மைப் பன்மைமுற்றும் , "பொன்னூசல் ஆடாமோ", என எதிர்கால இடைநிலை கெட்டு வருதலும் பிறவும்கொள்க.

22