பொதுவியல்

பொருள்கோள்
அளைமறிபாப்புப் பொருள்கோள்

 
417செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்
எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
செய்யுள் இறுதி மொழி = செய்யுளில் இறுதியில் நின்றசொல் , இடை முதலினும் எய்திய பொருள் கோள் = இடையிலும் முதலிலும் சென்ற பொருள்கோள் , அளைமறி பாப்பு - அளைமறிபாப்புப் பொருள்கோளாம்.

புற்றிலே தலைவைத்து மடங்கும் பாம்பு போலுதலால், அப்பெயர் பெற்றது. [அளை = புற்று. மறிதல் = மடங்குதல்.]

"தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமுஞ்
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமு - மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்
வாழ்ந்தபொழுதினே வானெய்தும் நெறி முன்னி முயலா தாரே" என வரும்.
இதனுள், வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதார் , மூழ்ந்த பிணி நலிய முன் செய்த வினையென்றே முனிவார், சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார், தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் எனத் தலைகீழாய் இடையிலும் முதலிலும் சென்று கூடுதல் காண்க.
66