ஞணநமலவளன ஒற்று இறு தொழிற் பெயர் ஏவல் வினை - ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் எட்டு மெய்களும் இறுதியாகிய முதல் நிலைத் தொழிற் பெயர்களும் ஏவல் வினைகளும் , ய அல் மெய் வரின் - யகர மொழிந்த மெய்கள் வருமாயின் , நனி உ, உறும் - பெரும்பாலும் உகரச் சாரியையை இறுதிக்கண் பொருந்தும் , சில ஏவல் சில் வழி உறா - சில ஏவல் வினைகள் சிலவிடங்களிலே அவ் உகரச் சாரியையைப் பொருந்தாவாம். முதல்நிலைத் தொழிற்பெயராவது , தொழிற்பெயர் விகுதி குன்றி முதல்நிலை மாத்திரம் நின்று தொழிற் பெயர்ப் பொருளைத் தருவதாம். 1. உரிஞுக்கடிது, உண்ணுக்கடிது , பொருநுக் கடிது , திருமுக்கடிது , தின்னுக்கடிது , நீண்டது , வலிது எனவும் . கடுமை, நீட்சி வன்மை எனவும் . தொழிற்பெயர்கள் இரு வழியும் உகரம் பெற்றன . மற்றவைகளும் இப்படியே. இவை, உரிஞுதல் உண்ணல் என்புழி வரும் விகுதி குன்றி , நின்றமை காண்க . 2. உரிஞு கொற்றா , உண்ணு கொற்றா , பொருநு கொற்றா , திருமுகொற்றா , தின்னுகொற்றா, நாகா , வளவா என ஏவல் வினை உகரம் பெற்றன . மற்றவையும் இப்படியே . உகரச் சாரியை பெற்றும் பெறாதும் வரும் ஏவல் வினைகள் ண,ன,ல,ள என்னும் நான்கு ஈற்றனவுமாம். வரலாறு :- உண் கொற்றா, தின் சாத்தா , வெல் பூதா, துள் வளவா என வரும் . ஞ,ந,ம,வ என்னும் நான்கு ஈறும் உகரம் பெற்றே வரும். இது ஏய்தாதது எய்துவித்தல் .
|