ண ன - ண கார னகாரங்கள் , வேற்றுமைக்கு வல்லினம் வரட் டறவும் - வேற்றுமைக்கண் வன்கணம் வந்தால் முறையே டகரமும் றகரமும் , பிற வரின் இயல்பும் ஆகும் - மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பும் ஆகும் , அல்வழிக்கு அனைத்து மெய் வரினும் இயல்பு ஆகும் - அல்வழிக்கண் மூவின மெய்களும் வந்தாலும் இயல்பேயாகும் . 1. சிறுகண் + களிறு = சிறுகட்களிறு , பொன் + தகடு = பொற்றகடு என வேற்றுமையிலே வல்லினம் வர,ண,னக்கள் திரிந்தன. 2. மண்ஞாற்சி, பொன்ஞாற்சி, நீட்சி , மாட்சி , யாப்பு, வன்மை என வேற்றுமையிலே மெல்லினமும் இடையினமும் வர ண, னக்கள் இயல்பாயின . 3. மண்கடிது , பொன்கடிது , சிறிது , தீது , பெரிது , ஞான்றது , நீண்டது , மாண்டது , யாது , வலிது என அல்வழியிலே மூவினமும் வர ண, னக்கள் இயல்பாயின . ஒப்பின் முடித்தலால் , னகரமும் உடன் கூறினார் . பின்னே கூட்டிச் சொல்லப்படும் எழுத்துக்களுக்கும் இவ் உத்தியே கொள்க .
|