எழுத்தியல்

பிறப்பு
மகரக் குறுக்கம்

 
96ண ன முன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ண ன முன்னும் - ணகர னகரங்களில் ஒன்று நின்று தொடர அதன்முன் வரினும் , வஃகான் மிசையும் - வகரம் வந்துதொடர அதன் மேல் நிற்பினும் , மக் குறுகும் - மகரம் தன் மாத்திரையில் குறையும்.

"வெருளினும் எல்லாம் வெருளுமஃ தன்றி
மருளினு மெல்லா மருண்ம்"
எனவும்,

"திசையறி மீகானும் போன்ம்"
எனவும்,

தரும் வளவன்
எனவும் வரும்.

இவற்றுள் , மருளும் என்பது "மருண்ம்" எனவும், போலும் என்பது "போன்ம்" எனவும் வருதலால் , செய்யுமென்னும் வாய்பாட்டு முற்றுச் சொல்லின் ஈற்றயலிலே உகரங் கெட நின்ற ளகர லகரந் திரிந்த ணகர னகரமே இங்கே சொல்லிய ணகர னகரம் என்றறிக.

இச் சூத்திரக் கருத்தைப் பின்வருஞ் சில சூத்திரங்களைக் கொண்டு உய்த்துணர வைத்தலால் , இது உய்த்துணரவைப்பு என்னும் உத்தி.

'மருளும்', 'போலும்' என்பன செய்யுமென் வாய்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று என்பது .

"பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே."
என்னும் சூத்திரம் கொண்டும்,

முற்றிறுதி யுகர வுயிர் கெடுமென்பது.

"செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளுள் உம் உந் தாகலு முற்றே
லுயிரு முயிர்மெய்யு மேகலு முளவே."
என்னும் சூத்திரம் கொண்டும்.

லகர ளகர மெய்களின் முன் மகரம் மயங்காது என்பது ,

"லளமுன் கசப வயவொன் றும்மே"
என்னும் சூத்திரம் கொண்டும் ,

லகர ளகரங்கள் மகரத்தின் முன் முறையே னகர ணகரங்களாகத் திரியு மென்பது,

"லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
யவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பு
மாகு மிருவழி யானு மென்ப ."
என்னும் சூத்திரம் கொண்டும் ;

இந்த ணகர னகரங்களுள் ஒன்றுடன் ஈரொற்றாய் மகரம் குறுகும் என்பதும் இவைகளின் முன் குறுகுதல் செய்யுளினிடத்தது என்பதும்;

"லளமெய் திரிந்த னணமுன் மகார
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே"

என்னும் சூத்திரம் கொண்டும் உய்த்துணரப்படும் .

இச் சூத்திரம் பருந்தின் வீழ்வு.

மகரக் குறுக்கம் இடவகையால் மூன்றாதல் காண்க.