தம் பெயர் மொழியின் - தம்முடைய பெயர்களைச் சொல்லி நிலைமொழி வருமொழிகளாகப் புணர்க்கும் இடத்து , முதலும் மயக்கமும் - மொழி முதலுக்கும் இடை நிலை மயக்கத்திற்கும் , இம்முறை மாறியும் இயலும் - இப்படி விதிக்கப்பட்டனவும் விலக்கப்பட்டனவுமாகிய எல்லா எழுத்துக்களும் முதலாகியும் மயங்கியும் வரும் , என்ப - என்று சொல்லுவர் புலவர் . இப்படி எல்லா எழுத்துக்களும் தனித்தனி அதற்கு அதுவே முதலாம் எனவே , ஈற்றிற்கு விதிக்கப்பட்டனவும் விலக்கப் பட்டனவும் ஆகிய எல்லா எழுத்துக்களும் தனித்தனி அதற்கு அதுவே ஈறாம் எனத் தானே விளங்குதலால் , ஈறும் என மிகைபடக் கூறாது ஒழிந்தார். *"அவற்றுள் , லளஃகான் முன்னர் யவ்வும் தோன்றும்" இதிலே லகரம் முதலாகியும் , கூனிறுதி ளகர மெய்யோடு மயங்கியும் வந்தது. **கெப் பெரிது - இதில் எகரம் மெய்யோடு ஈறாய் வந்தது. *(அ.கு) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 24 **கெ என்னும் எழுத்துக்குப் பெரிது என்பது பொருள் .
|