தத்தம் பகாப்பதங்களே - பெயர்ப் பகுபதங்களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் அவ்வவற்றின் முதலில் நிற்கின்ற பகாப்பதங்களே , பகுதி ஆகும்-பகுதிகளாம் . பெயர்ப் பகுபதங்கட்கும் வினைக்குறிப்புப் பகுபதங்கட்கும் பெரும்பான்மையும் பெயர்ச்சொற்களும் சிறுபான்மை இடைச்சொற்களும் பகுதிகளாம் . குழையன் , அகத்தன் , ஆதிரையான் , பல்லன் , செய்யன் , கூத்தன் எனப் பெயர்ப் பகுபதங்கட்குக் குழை , அகம் , ஆதிரை , பல் , செம்மை , கூத்து என்னும் பொருளாதி அறுவகைப் பெயரும் பகுதியாய் வந்தன . வினைக் குறிப்புமுற்றிற்கும் இவையே உதாரணமாம் எனக்கொள்க . அவன் , எவன் , பிறன் எனப் பெயர்ப் பகுபதங்கட்கு இடைச் சொற்கள் பகுதியாய் வந்தன . அற்று , இற்று , எற்று என வினைக்குறிப்பு முற்றுப் பகுபதங்கட்கு இடைச் சொற்கள் (பகுதியாய்) வந்தன .
|