மெய்யீற்றுப் புணரியல்

மெய்யீற்றின்முன் மெய்

 
206தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிநரு முளரே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன் ஒழி மெய்ம் முன் = தன்னை ஒழிந்த ஞ, ண, ந, ம, ன, ர, ல, வ, ழ, ள என்னும் பத்து மெய்களின் முன்னும் , ய வரின் = யகரம் வந்தால் , இகரம் துன்னும் என்று துணிநரும் உளர் - இகரச் சாரியையைத் தன்முன் பொருந்தும் என்று அரிதிற் கொள்வாரும் சிலருளர்.

வேளி யாவன், மண்ணி யாது எனவும்,
வேளி யானை, மண்ணி யானை எனவும் வரும்.

துணிநரும் என்ற எதிர்மறையாய இழிவுசிறப்பு உம்மையால், வேள் யாவன், மண் யாது எனப் பொதுவிதி பெறும் என்பார் பலருளரெனக் கொள்க.

இது "எண்மூ வெழுத்தீற்று" என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்புவிதி.