தன் என் என்பவற்று ஈற்று ன = தன் , என் , என்னும் விகார மொழிகளுடைய இறுதியிலுள்ள னகர மெய் , வன்மையோடு உறழும் - வல்லினம் வரின் பொது விதியால் றகரமாகத் திரிதலும் அவ்விதி ஏலாது இயல்பாதலுமாம் , நின் ஈறு இயல்பு ஆம் - நின் என்னும் விகாரமொழினது இறுதியிலுள்ள னகர மெய் வல்லினம் வரின் திரியாது இயல்பேயாகும் . தன்பகை , தற்பகை , என்பகை , எற்பகை எனவும் நின்பகை எனவும் வரும் . உறவே என்ற மிகையால் , மின் பின் முதலியவை , மின்கடிது , மின்கடுமை என இருவழியும் சாரியை பெறுதலும் திரிதலும் இன்றி வருதலும் , மான் குளம்பு, அழன் கை, கான் கோழி , வான் சிறப்பு , அலவன் கால் , கலுழன் சிறை என வேற்றுமையிலே சிறப்புவிதி சொல்லப் பெறாதவைகள் இயல்பாதலும் , வரிற் கொள்ளும் எனச் செயின் என்னும் வாய் பாட்டு வினையெச்சம் பொதுச்சூத்திரத்தால் இயல்பாகாது திரிதலும் , இன்னும் னகர மெய் ஈற்றுள் அடங்காதவை இருந்தால் அவையும் கொள்க. [அழன்-பிணம்] 'னவ் வன்மையோ டுறழும் ' என்றது "ண னவல்லினம் வரட் டறவும் " என எய்தியது ஒருவாற்றால் விலக்கல் ; ' நின்னீறியல்பாம் ' என்றது எய்தியது விலக்கல் .
|