தம்பால் இல்லது இல் எனின் = தம்மிடத்து இல்லாத பொருளைச் சொல்லி அச்சொல்லைக் கொண்டு அதனை இல்லை என்றும் , உற்றது சுட்டியும் - உள்ள பொருளாயின் இவ்வளவு உண்டென்றும் , உரைப்பர் சொற் சுருங்குதற்கு - சொல்லுவர் வினாவும் விடையும் ஆகிய சொற்கள் சுருங்குதல் பொருட்டு . குன்றக் கூறல் முதலிய குற்றங்களை நீக்கிச் சுருங்கச் சொல்லல் முதலிய அழகோடு கூறுதல் வழக்கிற்கும் வேண்டும் என்பார் , சொல் சுருங்குதற்கே என்றார் . 1 . பயறுண்டோ வணிகீரே என்றவருக்கு , அஃது இல்லை என்பார் , உழுந்துண்டு உழுந்தும் துவரையும் உண்டு என அதன் இனத்தைந் சொல்லக் கடவர் . இவ் இனமொழிகள் பயறு இல்லை என்னும் விடைப்பொருள் தந்துநிற்றலே அன்றி , மேலே உழுந்துண்டோ. துவரையுண்டோ என்னும் வினாக்களும் அவற்றிற்கு விடைகளும் பல்காமல் காத்து நிற்றலும் உடையனவாதல் காண்க. 2. பயறுண்டோ வணிகீரே என்றவருக்கு அஃது உண்டென்பார் இருகலம் உண்டு இருதூணி உண்டு என அதன் அளவைச் சொல்லக்கடவர் . இவ் அளவை மொழிகள் பயறு உண்டென்றும் விடைப்பொருளைத் தந்து நிற்றலேயன்றி , மேலே எவ்வளவு உண்டு என்னும் வினாவும் அதற்கு விடையும் பல்காமல் காத்து நிற்றலும் உடையன ஆதல் காண்க .
|