சிறப்புப்பாயிரம்

சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியார் இவர் என்பது

 
51தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன் ஆசிரியன் - தன்னுடைய ஆசிரியனும் , தன்னொடு கற்றோன் - தன்னோடு பாடம் கேட்டவனும் , தன் மாணாக்கன் - தன்னுடைய மாணாக்கனும் , தகும் உரைகாரன் - தன் நூலுக்குத் தகும் உரையைச் செய்தவனும் , என்று இன்னோர் - என்று சொல்லப்பட்ட இந் நால்வருள் ஒருவர் , பாயிரம் இயம்புதல் கடன் - சிறப்புப் பாயிரத்தைச் சொல்லுதல் முறைமையாகும்.

தன்னொடு கற்றோன் எனினும் , ஒரு சாலை மாணாக்கன் எனினும் ஒக்கும் .