உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
247தான் தாம் நாம் முதல் குறுகும் யான்யாம்
நீ நீர் என் எம் நின்நு மாம்பிற
குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தான் தாம் நாம் முதல் குறுகும் - தான் , தாம் , நாம் என்னும் மூன்று பெயர்களும் உருபுகள் புணரும் இடத்து நெடு முதல் குறுகி முறையே தன் , தம் , நம் என வரும் , யான் யாம் நீ நீர் என் எம் நின் நும் ஆம் - யான் , யாம் , நீ , நீர் என்னும் நான்கு பெயர்களும் உருபுகள் புணரும் இடத்து முறையே என் , எம் , நின் , நும் , எனத்திரியும் , குவ்வின் அவ்வரும் - இவ் ஏழு பெயரோடு குவ்வுருபு புணருமிடத்து நடுவே அகரச் சாரியை வரும் , நான்கு ஆறு இரட்டல - குவ்வுருபின் அகரச் சாரியை வரினும் ஆறாம் வேற்றுமை உருபு உயிர்கள் வரினும் இவ்வேழு விகார மொழிகளின் இறுதியில் உள்ளனவாகிய தனிக் குறில் முன் ஒற்றுக்கள் இரட்டாவாம் .

1 . தான் + ஐ = தன்னை , தாம் + ஐ = தம்மை , நாம் + ஐ = நம்மை எனவும் , யான் + ஐ = என்னை , யாம் + ஐ = எம்மை , நீ + ஐ = நின்னை , நீர் + ஐ = நும்மை எனவும் வரும் , ஒழிந்த உருபுகளோடும் இப்படியே ஒட்டுக .

2 . தனக்கு , தமக்கு எனக் கு உருபு புணருமிடத்து அகரச் சாரியை பெற்றன .

3 . தனக்கு எனவும் , தனது , தனாது , தன எனவும் அகரச் சாரியையும் ஆறாம் வேற்றுமை உருபு உயிர்களும் வந்த இடத்தும் தனிக்குற்றொற்று இரட்டாவாயின .

பிற என்ற மிகையால் , நீ , நீர் , என்பன முறையே உன் , உம் , எனவும் திரிந்து வருதல் கொள்க .