பொதுப்பாயிரம்

ஆசிரிய ராகாதவர் இலக்கணம்

 
33தானே தரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தானே தரக் கொளின் அன்றி - தானே தன்னிடத்து உள்ள பழங்களைத் தரக்கொண்டால் கொள்ளலாமே அன்றி , தன்பால் மேவிக் கொளக்கொடா இடத்தது - ஒருவர் தன்னிடத்து நெருங்கி வந்து பறித்துக் கொள்ள அப்பழங்களைக் கொடாத இடத்தையுடையது , மடற்பனை - தன் வடிவம் முழுவதும் மடல் விரிந்த பனை .

தாமே தம்மிடத்தில் உள்ள நூல் பொருள்களைச் சொல்ல அறிந்துகொண்டால் கொள்ளலாமே அன்றி , ஒருவர் தம் இடத்து நெருங்கி வந்து வினாவி அறிந்துகொள்ள அந்நூற் பொருள்களைச் சொல்லாத இடத்தை உடையவர் ஆசிரியர் ஆகாதவர் ஆதலால் மடற்பனை அவருக்கு உவமானம் ஆயிற்று .