திசையொடு திசையும் பிறவும் சேரின்- திசைப் பெயரோடு திசைப்பெயரும் பிற பெயர்களும் புணருமிடத்து , நிலை ஈற்று உயிர்மெய் கவ் வொற்று நீங்கலும் -நிலைமொழி ஈற்றிலே நின்ற உயிர்மெய்யும் அதன்மேல் நின்ற ககர மெய்யும் கெடுதலும் , றகரம் ன ல ஆத்திரிதலும் ஆம் - அவ்விடத்து நின்ற றகரமெய் னகர மெய்யாகவும் திரிதலும் ஆகும். பிற என்ற மிகையினாலே, திசைப்பெயரோடு திசைப்பெயர் புணரும்போது நிலைமொழி பெருந்திசை வருமொழி கோணத்திசை எனவும், நிலைமொழியாய் நிற்பன வடக்கும் தெற்குமே எனவும், தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும் மேற்கு என்பதன் றகரம் லகரமாகவும் திரியும் எனவும், மேற்கு என்பதன் றகரந் தகரம் வரும் வழித் திரியாது எனவும் , கிழக்கு என்பதன் ழகரத்து அகரம் கெட்டு முதல் நீண்டே வரும் எனவும் கொள்க . வடக்கு - வடமேற்கு , வடதிசை , வடபால் , வடமலை , வடவேங்கடம் எனவும் , தெற்கு - தென்கிழக்கு , தென்மேற்கு , தென்குமரி , தென்மலை , தென்வீதி எனவும் , மேற்கு - மேல்கடல் , மேனாடு , மேல்வீதி , மேற்றிசை எனவும் , குடக்கு- குடதிசை , குடகடல் , குடநாடு எனவும் , குணக்கு - குணதிசை , குணகடல் எனவும் , கிழக்கு - கீழ்கரை , கீழ்சார் , கீழ்த்திசை எனவும் வரும் . இன்னும் , பிற என்ற மிகையாலே . கீழைக்குளம் , கீழைச்சேரி , மேலைக்குளம் , மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலும் , வடக்கூர் , வடக்குமலை ; தெற்கூர் , தெற்குமலை என மேற்காட்டிய விகாரமின்றியும் வருதலும் , பெருந்திசையோடு பெருந்திசை புணரும்போது , தெற்குவடக்கு , வடக்குத்தெற்கு , கிழக்குமேற்கு மேற்குக்கிழக்கு எனப் பொதுவிதி பெறுதலும் கொள்க . வடகிழக்கு என்பது வடக்கும் கிழக்கும் ஆயதோர் கோணம் என உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை . வடதிசை என்பது வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை . வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை . தெற்கு வடக்கு என்பது தெற்கும் வடக்கும் என உம்மைத்தொகை . இது எய்தாதது எய்துவித்தல்
|