திணை = திணைகளும் , பால் - பால்களும் ,பல பொருள் - வெவ்வேறு வினைக்கு உரிய பல பொருள்களும் , விரவின = தத்தமில் கலந்து ஒருதொடராக வருவன ஆயின் அவை , சிறப்பினும் மிகவினும் இழிபினும் ஒருமுடிபின - சிறப்பினாலும் மிகுதியினாலும் இழிவினாலும் ஒருமுடிபினவாகும்.
திணை:1 . "அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் -திங்களுஞ் சான்றோரு மொப்பர் மற் - றிங்கண் - மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து. தேய்வ ரொருமா சுறின் - என்புழி, இருதிணையும் கலந்து, சிறப்பினால் ஒப்பர் என்னும் உயர்திணை முடிபைப் பெற்றன, சான்றோர் திங்கள்போல மறுத் தாங்க மாட்டாமை இங்கே சிறப்பு.
2. "பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் - மூத்தாரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட் - காற்ற வழி விலங்கி னாரே பிறப்பிடைப் போற்றி யெனப்படுவார்" என்புழி, இருதிணையும் கலந்து, மிகுதியால் 'இவர்கள்' என்னும் உயர்திணை முடிபைப் பெற்றன. பசு என அஃறிணைப்பொருள் ஒன்றே ஆகப் பார்ப்பார் முதலிய உயர்திணைப் பொருள் ஏழு ஆதல் இங்கே மிகுதி. 3."மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா" என்புழி, இருதிணையும் கலந்து, இழிவினால் விடா என அஃறிணைமுடிபைப் பெற்றன. பால்:" நானு மென்சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந் தானுந்தன் றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்...வானுந் திசைகளு மாகடலு மாயபிரான். றேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்புழி, ஆண்பாலும் பெண்பாலும் கலந்து, சிறப்பினால் 'ஆண்டிலன்' என ஆண்பால் முடிபைப் பெற்றன.பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு. "சொற்றொறு மிற்றிதன் பெற்றி" என்பதனாலே கலவாது எண்ணித், தோழனும் தானும் வந்தான். தோழியும் தானும் வந்தாள் என முடிதலும் கொள்க. மரபு:கறியுஞ் சோறும் உண்டான்; மாலையும் முடியும் கவித்தான் என்புழி, வேறுவினைப் பல்பொருள்கள் கலந்து, சிறப்பினால் ' உண்டான் ' ' கவித்தான் ' என ஒருபொருட்கு உரிய வினை முடிபைப் பெற்றன உண்டல் என்னும் வினைக்கு உரிய சோறு தின்றல் என்னும் வினைக்கு உரிய கறியினும் தலைமை உடைமையும்,கவித்த என்னும் வினைக்கு உரிய முடி சூடுதல் என்னும் வினைக்கு உரிய மாலையினும் தலைமை உடைமையும் இங்கே சிறப்பு. இங்கே இறுதியில் சொல்லிய மரபு வழுவமைதி "வேறு வினைப் பல்பொருள் தழுவியபொதுச் சொல்லும் - வேறவற்றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்" என்னும் சூத்திரத்தோடு மாறுகொளக் கூறல் அன்றோ எனின், சிறப்பு முதலிய குறியாது ஒத்த நிலைமையில் எண்ணியபோது முடியும் மரபு அங்கே கூறுதலால், அதற்கு இது மாறுகொளக்கூறல் அன்றென்க. 27
|