திணை = ஐந்திணையும் , நிலம் = தேசமும் , சாதி = குலமும் , குடி = குடியும் , உடைமை ,= உடைமையும் , குணம் = குணமும் , தொழில் = தொழிலும் , கல்வி = வித்தையும் ஆகிய இவற்றைப்பற்றி வரும் , சிறப்பு ஆம் பெயரோடு இயற்பெயர் ஏற்றிடின் = சிறப்புப் பெயருடனே இயற்பெயரை ஒருபொருள் ஒருங்கு ஏற்குமாயின் , பின் வரல் சிறப்பு = அவ் இயற்பெயர் பின் வருதல் சிறந்த மரபாம். பின்வரல் சிறப்பே என்றதனால். முன் வரும் என்பதும் அது வழுவமைதி என்பதும் பெற்றாம். குன்றவன் கொற்றன், கொற்றன் குன்றவன்-----திணை. அருவாள னழகன், அழக னருவாளன்-----நிலம். பார்ப்பான் பாராயணன், பாராயணன் பார்ப்பான்-----சாதி. ஊர்கிழான் ஓணன், ஒணன் ஊர்கிழான்-----குடி. பொன்னன் பொறையன், பொறையன் பொன்னன் ----- உடைமை. கரியன் கம்பன், கம்பன் கரியன்-----குணம். நாடகி நம்பி, நம்பி நாடகி-----தொழில். ஆசிரியன் அமிழ்தன், அமிழ்தன் ஆசிரியன்-----கல்வி.
இன்னும், இயற்பெயர் முன்வரும் இடத்து வைத்தியநாத நாவலன், கச்சியப்பப் புலவன் என இறுதி விகாரமாக வருதலும் காண்க. 42
|