ஈறு போதல்-இறுதியிலுள்ள மை விகுதி கெடுதலும் , இடை உகரம் இ ஆதல்-நடுநின்ற உகரம் இகரமாதலும் , ஆதி நீடல்-முதல் நின்ற குறில் நெடிலாதலும் , அடிஅகரம் ஐ ஆதல்-முதல் நின்ற அகரம் ஐகாரமாதலும் , தன் ஒற்று இரட்டல் - தன் மெய் நடுவே மிகுதலும் , முன்னின்ற மெய்திரிதல்-முன்னின்ற மெய் வேறொரு மெய்யாதலும் , இனம் மிகல் - வருமெழுத்திற்கு இன வெழுத்து மிகுதலும் , இனையவும் - இவை போல்வன பிறவும் , பண்பிற்கு இயல்பு - அப்பண்பினுக்கு இயல்பாகும் . இவ் விகாரங்கள் பதப் புணர்ச்சிக்கும் கொள்க . இது ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி . நல்லன் - நன்மையின் மை விகுதி கெட்டது . கரியன்-கருமைபின் மை விகுதி கெட்டு நடு நின்ற உகரம் இகரமாயிற்று . பாசி - பசுமையின் மை விகுதி கெட்டு , ஆதி நீண்டது . பைந்தார் - பசுமையின் விகுதியும் நடுநின்ற உயிர்மெய்யும் கெட்டு , வரும் எழுத்திற்கு இனவெழுத்து மிகுந்து முதலிலிருந்த அகரம் ஐகாரமாயிற்று . வெற்றிலை - வெறுமையின் மை விகுதி கெட்டுத் தன்னொற்று இரட்டியது . சேதாம்பல் - செம்மையின் மை விகுதி போய் , ஆதி நீண்டு , முன்னின்ற மகர மெய் தகர மெய்யாகத் திரிந்தது . இவ்விகாரங்கள் அன்பன் , அழகன் முதலிய வாய்பாடுகளுக்கு எய்தாது செம்மை , சிறுமை முதலாக எடுத்துக் காட்டிய வாய்பாடுகளுக்கே எய்த வைத்தலால் இது எடுத்த மொழியின் எய்தவைத்தல் என்னும் உத்தி .
|