உயிரீற்றுப் புணரியல்

பொதுப் புணர்ச்சி

வினாப்பெயர் விளிப்பெயர் முன் வல்லினம்

 
160ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி யியல்பே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஈற்று (வினா முன் ) - ஆ , ஏ , ஓ என்னும் மூன்று ஈற்று வினா முன்னும் , யா என்னும் வினாப் பெயர் முன்னும் , விளிப்பெயர் முன் - உயிரீறும் மெய்யீறுமாகிய விளிப்பெயர் முன்னும் , வலி இயல்பு - வரும் வல்லெழுத்துக்கள் இயல்பாகும் .

1.நம்பியா கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் எனவும் , உண்கா கொற்றா சாத்தா , தேவா , பூதா , எனவும் ஈற்று வினா .முன் வலி இயல்பாதல் காண்க , [ உண்கு + ஆ = உண்கா = உண்பேனா ] இறுதி ஏகார ஓகார வினாக்களுக்கு உதாரணம் - " இடைச்சொல்லேயோ " என்னும் சிறப்புச் சூத்திரத்தில் பெறப்படும் . யா குறியன , சிறியன , தீயன , பெரியன என யா வினா முன் வலி இயல்பாதல் காண்க .

2 . நம்பி , நம்பீ ; விடலை , விடலாய் , கிள்ளை , கிள்ளாய் , தாய் , தாயே - இவற்றின் முன் கொள் , செல் , தா , போ இவற்றை வருவித்து , நம்பி கொள் , நம்பி செல் , நம்பி தா , நம்பி போ என முறையே கூட்டி , விளிப்பெயர் முன் வலி இயல்பாதல் காண்க .