பொதுப்பாயிரம்

3. பாடம் சொல்லலினது வரலாறு

 
36ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஈதல் இயல்பு இயம்புங் காலை-பாடம் சொல்லுதலினது வரலாற்றைச் சொல்லும்போது , காலமும் இடனும் வாலிதின் நோக்கி - உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயனவாகப் பார்த்து , சிறந்துழி இருந்து - சிறந்த இடத்திருந்து , தன் தெய்வம் வாழ்த்தி - தான் வழிபடும் கடவுளைத் துதித்து , உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து - பாடம் சொல்லப்படும் பொருளைத் தன் கருத்தின்கண் நிறைத்து , விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து - விரையான் ஆகியும் கோபம் செய்யான் ஆகியும் இச்சித்து முகம் மலர்ச்சியை அடைந்து , கொள்வோன் கொள்வகை அறிந்து -கேட்பவனது கேட்கும் அறிவின் வகையை அறிந்து , அவன் உளம் கொள - அவனது மனம் ஏற்றுக்கொள்ள , கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப - மாறுபாடு இல்லாத மனத்து உடனே நூலைக் கொடுத்தலாகும் என்று சொல்லுவர் புலவர்.