பொதுப்பாயிரம்

ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியன் இலக்கணம்

 
27தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தெரிவு அரும் பெருமையும் - பிறரால் அறியப்படாத உருவத்தின் பெருமையும் , திண்மையும் - பெரிய பாரம் செய்து தன்மேலே நெருங்கின் அவைகளால் கலங்காத வலிமையும் , பொறையும் - தன்னை அடுத்த மனிதர் தோண்டுதல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும் , பருவ முயற்சி அளவில் பயத்தலும் - பருவத்திலே உழவர் செய்யும் முயற்சி அளவிற்குத்தக அவர்க்குப் பயனைத் தருதலும் , நல் நிலம் மருவிய மாண்பு ஆகும் - நல்ல நிலத்தின் இடத்துப் பொருந்திய குணங்கள் ஆகும் .

பிறரால் அறியப்படாத கல்வி அறிவின் பெருமையும் , பெரியவாதம் செய்து தன் மேலே நெருங்கினவரால் கலங்காத வலிமையும் , தன்னை அடுத்த மாணாக்கர் இகழ்தல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும் , பருவத்திலே மாணாக்கர் செய்யும் முயற்சி அளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதலும் ஆசிரியன் இடத்துப் பொருந்திய குணங்கள் ஆதலால் நிலம் அவனுக்கு உவமானம் ஆயிற்று .