தேன்மொழி = தேன் என்னும் சொல் , மெய்வரின் இயல்பும் = மூவின மெய்களும் வரின் இறுதி னகர மெய் இயல்பாதலும் , மென்மை மேவின் இறுதி அழிவும் - மெல்லினம் வரின் அம்மெய் இயல்பாதலே அன்றிக்கெடுதலும் , வலி வரின் ஈறு போய் வலி மெலி மிகலும் ஆம் = வல்லினம் வரின் அம்மெய் இயல்பாதலே அன்றிக் கெட வந்த வல்லினமாவது , அதற்கினமாவது மிகுதலும் ஆகும் , இரு வழி - இரு வழிக்கண்ணும் . 1. தேன்கடிது , தேன்ஞான்றது , தேன்யாது எனவும் , தேன்மொழி , தேமொழி எனவும் தேன்குழம்பு , தேக்குழம்பு , தேங்குழம்பு எனவும் அவ்வழியில் வந்தன . 2. தேன் கடுமை, தேன் மலிவு , தேன் யாப்பு எனவும் தேன்மலர் , தேமலர் , எனவும் தேன்குடம் , தேக்குடம் , தேங்குடம் எனவும் வேற்றுமையில் வந்தன . ' இருவழி ' மெய்வரின் இயல்பு என்றது "ண னவல் லினம் வரட் டறவும் " என எய்தியது விலக்கலும் , "பிற வரினியல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினுமியல்பாகும் " என எய்தியது இகந்து படாமைக் காத்தலும் ' மென்மை மேவினிறுதி யழிவும் வலிவரி னீறுபோய் ' என்றது இச்சூத்திரத்தில் இயல்பு என எய்தியதன்மேல் சிறப்பு விதி ; ' வலிமெலி மிகும் ' என்றது " இயல்பினும் விதியினும் " என்பதனால் எய்தியதன்மேல் சிறப்புவிதி .
|