பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
தொகைநிலைத் தொடர்மொழிகள் பலபொருள் படுதல்

 
373தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தொக்குழி மயங்குந = வேற்றுமை உருபு முதலாகிய உருபுகள் தொக்கு நின்றவழிப் பொருள்களினாலே மயங்கும் தன்மையனவாகிய தொடர்மொழிகள், இரண்டு முதல் ஏழ் எல்லைப் பொருளின் மயங்கும் என்ப - இரண்டு முதல் ஏம் ஈறாகிய பொருள்களால் மயங்கும் என்று சொல்லுவர் புலவர்.

1.தெய்வவணக்கம் என்பது, தெய்வத்தை வணங்கும் வணக்கம். தெய்வத்துக்கு வணக்கம் என இருபொருள்களினாலே மயங்கியது.

2.தற்சேர்ந்தார் என்பது, தன்னைச் சேர்ந்தார், தன்னொடு சேர்ந்தார். தன்கண் சேர்ந்தார் என மூன்று பொருள்கனினாலே மயங்கியது.

3.சொல்லிலக்கணம் என்பது, சொல்லினதிலக்கணம், சொற்கு இலக்கணம், சொல்லின்கண் இலக்கணம், சொல்லினது இலக்கணம் சொன்னநூல் என நான்கு பொருள்களினாலே மயங்கியது.

4.பொன்மணி என்பது, பொன்னாலாகிய மணி, பொன்னாகிய மணி, பொன்னின்கண் மணி, பொன்னொடு சேர்ந்த மணி, பொன்னும் மணியும் என ஐந்து பொருள்களினாலே மயங்கியது.

5. மரவேலி என்பது மரத்தைக் காக்கும் வேலி,மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தின் புறத்து வேலி, மரத்தால் ஆகிய வேலி, மரமாகிய வேலி என ஆறு பொருள்களினாலே மயங்கியது

6.சொற்பொருள் என்பது, சொல்லால் அறியப்படும் பொருள், சொல்லினது பொருள், சொற்குப்பொருள், சொல்லின்கண் பொருள், சொல்லும் பொருளும், சொல்லாகிய பொருள் சொல்லானது பொருள் என ஏழு பொருள்களினாலே மயங்கியது.சொல்லானது பொருள் என்றது தொகாநிலைப் பொருளாகிய எழுவாய்த்தொடர்.

7. புலி கொல் யானை என்னும் பன்மொழித் தொடர், புலியைக் கொன்ற யானை, புலியானது கொன்ற யானை, புலியினாலே கொல்லப் பட்ட யானை என மூன்று பொருள்களினாலே மயங்கியது.

இவ்வாறு செம்பொருள் கொள்ளாது வலிந்து பொருள் கொள்ளப் புகின், ஏழ் எல்லை என்னும் வரையறையின் நில்லாது பலவாமாதலின், அது தொன் நெறி அன்று என்பது விளக்குதற்கு என்ப என்றார்.

22