சிறப்புப்பாயிரம்

வழியின் வகையாகிய நூல் யாப்புக்குச் சிறப்பு விதி

 
50தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தொகுத்தல் - விரிந்து கிடந்ததைத் தொகுத்துச் செய்தலும் , விரித்தல் - தொக்குக் கிடந்ததைத் விரித்துச் செய்தலும் , தொகை விரி - தொகுத்தும் விரித்தும் செய்தலும் , மொழி பெயர்ப்பு - ஒரு பாடையில் உள்ள நூலை மற்றொரு பாடையிலே திருப்பிச் செய்தலும் , என - என்று , தகுநூல் யாப்பு ஈரிரண்டு என்ப - தக்க நூல் யாப்பானது நால்வகைப்படும் என்று சொல்லுவர் புலவர் .

மலர்தலை என்னும் சூத்திரத்து உள்ளே தொகை வகை விரி யாப் பென்று சொல்லியது இந் நான்கு பிரிவினுள் இல்லையே யெனின் , நடு நின்றவகை பின் நின்ற விரியைக் குறிக்கும்போது தொகையாகவும், முன் நின்ற தொகையைக் குறிக்கும்போது விரியாகவும் நிற்றலினாலே , தொகை வகை விரி என்றது தொகை விரி என்பதனுள் அடங்கும் எனக் கொள்க.