உயிரீற்றுப் புணரியல்

புணர்ச்சி

விகாரப் புணர்ச்சி

 
154தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் - எழுத்தாயினும் சாரியையாயினும் தோன்றுதலும் வேறு படுதலும் கெடுதலும் முன் சொன்ன விகாரமாகும் , மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும் - இம் மூவகை விகாரமும் நிலைமொழி வருமொழிகளுடைய முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் ஏற்றபடி வரும்.

பூ + கொடி = பூங்கொடி - வருமொழி முதலில் மெய் தோன்றிற்று.

பல் + தலை = பஃறலை - வருமொழி முதலிலும் நிலைமொழி ஈற்றிலும் உள்ள மெய்கள் திரிந்தன.

நிலம் + வலயம் = நிலவலயம் - நிலைமொழி ஈற்று மெய் கெட்டது.

ஆறு + பத்து = அறுபது - நிலைமொழி முதலுயிர் திரிந்து வருமொழி இடை ஒற்றுக் கெட்டது.

பல + பொருள் = பல்பொருள் - நிலைமொழி ஈற்றுயிர் கெட்டது.

நாழி + உரி = நாடுரி - நிலைமொழி ஈற்றுயிர் மெய் கெட்டு டகர மெய் தோன்றிற்று.

தமிழ் + பிள்ளை = தமிழ்ப்பிள்ளை - நிலைமொழி ஈற்றில் சாரியை தோன்றிற்று.

பனை + காய் = பனங்காய் - நிலைமொழி ஈற்றுயிர் கெட்டுச் சாரியை தோன்றிற்று.