பதவியல்

பகுதி
தெரிநிலைவினைப் பகுதிக்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி

 
137நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
றெய்திய விருபான் மூன்றா மீற்றவும்
செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நட...அஃகு என்று - நட , வா , மடி , சீ, விடு , கூ , வே , வை , நொ , போ , வௌ , உரிஞ் , உண், பொருந் , திரும் , தின் , தேய் , பார் , செல் , வவ் , வாழ் , கேள் , அஃகு என்று எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்றவும்-முதனிலையாகப் பொருந்திய இருபத்து மூன்றாகும் உயிரும் மெய்யும் குற்றியலுகரமுமாகிய ஈற்றையுடைய இவை முதலாகிய வாய்பாடுகளெல்லாம் , செய் என் ஏவற் பகாப்பதம்-செய் என்னும் ஏவலினது பகாப்பதமாகிய பகுதியும் , வினைப் பகாப்பதம் மற்றை வினைப் பகாப்பதங்களாகிய பகுதியுமாம் .

விகற்பத்தின் முடித்தல் என்னும் உத்தியால் இருபத்து மூன்று ஈற்றனவாக விகற்பித்து எடுத்துக்காட்டும் வாய்ப்பாடுகளெல்லாம் இப்பொது வாய்பாட்டில் அடங்கும் என்பார் முடிந்தது முடித்தல் என்னும் உத்தியால் செய்யெனவும் கூறினார் .

செய்யென் வினைப் பகாப்பதம் என்ற அளவிலே செய்யென் ஏவல் பகாப்பதமும் அடங்குமாயினும் நட வா முதலிய முதனிலைகளே ஏவல் பொருளுணர்த்தாது ஆய் விகுதியோடு புணர்ந்து நின்று உணர்த்தும் என்று அறிவித்தற்கு வேறு கூறினார் .

ஏவற் பகுதிக்கு உதாரணம் :-

நடவாய், வாராய் , உண்ணாய் , தின்னாய் , அஃகாய்
எனவும் ,
நடமின் , வம்மின் , உண்மின் , தின்மின் , அஃகுமின்
எனவும் வரும் .

முன்னிலை ஏவல் ஒருமை வினைச்சொற்கள் ஆய் என்னும் விகுதி குன்றி நட , வா , உண் , தின் , அஃகு என நிற்கும் என அறிக . நிற்பினும் விகுதியோடு புணர்ந்தவைகளேயாம் . இப்படி விகுதி புணர்ந்து கெட்டு நிற்கும் சொற்கள் இன்னும் பல உண்டு. அவையெல்லாம் பின் காட்டப்படும் .

மற்றை வினைப்பகுதிக்கு உதாரணம் :-

நடந்தான் , வந்தான் , மடித்தான் , சீத்தான், விட்டான் , கூவினான் , வெந்தான் , வைத்தான் , நொந்தான் , போயினான் , வௌவினான் , உரிஞினான் , உண்டான் , பொருநினான் , திருமினான் , தின்றான் , தேய்த்தான் , பார்த்தான் , சென்றான் , வவ்வினான் , வாழ்ந்தான் , கேட்டான் , அஃகினான் , என வரும் .

இந் நூலாசிரியர் வடநூல் மேற்கோளாக ஒரு மொழியை விதந்து பகாப்பதம் பகுபதமெனக் காரணப் பெயர் தாமே இட்டு , எழுத்தே என்னும் சூத்திரம்முதல் இதுவரையும் பகாப்பதம் பகுபதம் எனப் பலதரம் சொல்லுதல் தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல் என்னும் உத்தி .

இத் தெரிநிலைவினைப் பகுதிகள் விகுதியோடு புணரும்போது தொழுதான் , உண்டான் எனச் சில இயல் பாதல் அன்றியும் ,

செல் - சேறல் என முதல் நீண்டும் ,
தா - தந்தான் எனத் தனிநெடில் குறுகியும் ,
சா - செத்தான் என முதல் ஆகாரம் எகரமாகியும் ,
கொணா - கொணர்ந்தான் என முதனிலைய லெழுத்துக் குறுகி ரகர மெய் விரிந்தும் ,
விரவு - விராவினான் என நடுக்குறில் நீண்டும் ,
முழுகு - முழுகினான் , மூழ்கினான் என இயல்பும் விகாரமுமாக உறழ்ந்தும் ,
வா - வருகிறான் எனத் தனி நெடில் குருகி ஓருயிர் மெய் விரிந்தும் ,
கல் - கற்றான் என ஈற்று மெய் வரு மெய்யாகத் திரிந்தும் ,
செல் - சென்றான் என ஈற்று மெய் வரு மெழுத்திற்கு இனமாகத் திரிந்தும் இன்னும் பலவாறு விகாரப்பட்டும் வரும் .
கா , சா , தா - இவை முறையேகாத்தான் , செத்தான் , தந்தான் எனவும் ,
கல் , நில் , புல் , சொல் - இவை கற்றான் , நின்றான் , புல்லினான் சொன்னான் எனவும் ,

ஒரு நிகராகிய பகுதிகள் பல விதமாக விகாரப்படுதலால் , அவை எல்லாம் தனித்தனி சொல்லப் புகின் விரியும் ஆதலால் செய்யுள் வழக்கத்தையும் உலக வழக்கத்தையும் பார்த்துச் செய்யுள் விகாரமும் புணர்ச்சி விகாரமும் கொண்டு அமைத்துக் கொள்க.

தெரிநிலைவினைப் பகுபதங்கட்கு , நட வா , முதலிய வினைச் சொற்களே அன்றிச் சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும் பகுதிகளாய் வரும் .

சித்திரித்தான் , கடைக்கணித்தான் என்பவற்றில் முறையே சித்திரம் , கடைக்கண் என்னும் பெயர்சொற்கள் பகுதியாயின .

பொன்போன்றான், புலி நிகர்த்தான் என்பவற்றில் முறையே போல் , நிகர் என்னும் இடைச்சொற்கள் பகுதியாயின .

சான்றான் , மாண்டான் என்பவற்றில் முறையே சால் , மாண் என்னும் உரிச்சொற்கள் பகுதியாயின .

பிறவும் இவ்வாறு வருதல் காண்க .