பெயரியல்

வேற்றுமை
நான்காம் வேற்றுமை

 
298நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவது வாதல்
பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நான்காவதற்கு உருபு குவ்வே ஆகும் = நான்காம் வேற்றுமைக்கு உருபு முன் சொல்லப்பட்ட குவ் ஒன்றுமே ஆம், பொருள் = அவ் உருபின் பொருள்களாவன, கொடை = கொடையும், பகை = பகையும், நேர்ச்சி = நட்பும், தகவு = தகுதியும், அது ஆதல் - முதல்காரணமும், பொருட்டு = நிமித்த காரணமும் , முறை ஆதியின் = முறையும் முதலான பொருள்சொற்களின் புணர்ச்சியில் , இதற்கு இது எனல் = இதற்கு இது என்பதுபட வருவனவாகிய அவ்வுருபு ஏற்ற பெயர்ப்பொருள் வேறுபட்ட பலவுமாம்.

கொடை எனவே கோடற்பொருளும், பகை நேர்ச்சி எனவே பகைதொடர் பொருளும் நட்புத்தொடர் பொருளும், தகுதி எனவே தகுதியுடைப் பொருளும் , அதுவாதல் எனவே முதற்காரண காரியப் பொருளும், பொருட்டு எனவே நிமித்த காரணகாரியப் பொருளும் , முறை எனவே முறைக்கு இயைபொருளும், குவ்வுருபின் பொருள்களாம் என்பது பெற்றாம்.
இரவலர்க்குப் பொன்னைக் கொடுத்தான்... கோடல்பொருள்.
பாம்புக்குப் பகை கருடன்............ பகைதொடர் பொருள்.
சாத்தனுக்கு நட்பாளன் கொற்றன்......... நட்புத்தொடர்பொருள்.
அரசர்க் குரித் தருங்கலம்............ தகுதியுடைப் பொருள்.
குண்டலத்திற்குப் பொன்............ முதற்காரண காரியப் பொருள்.
கூலிக்கு வேலை செய்தான்............ நிமித்தகாரண காரியப் பொருள்.
சாத்தானுக்கு மகன் கொற்றன்......... முறைக்கு இயைபொருள்.

கோடற்பொருளாவது கொடுத்தல் தொழிலின் செயப்படு பொருளைத் தனக்கு உரியது ஆக்கிக் கொள்ளுதலையுடைய பொருளாம். கோடற்பொருள், கோளிப்பொருள் என்பன ஒருபொருள் சொற்கள்.

இரவலர்க்குப் பொன்னைக் கொடுத்தான் என்புழிக் கொடுத்தலின் செயப்படுபொருள் பொன்; அதனைத் தனக்குரியதாக்கிக் கொள்ளுதலையுடைய பொருள் இரவலராதலால், இரவலர் கோடற் பொருள்.

இன்னும் , மாணாக்கனுக்கு அறிவு கொடுத்தான் என்புழி, அறிவாகிய செயப்படுபொருள் கொடுப்போன் பொருளாய்க் கொள்வோன் இடத்துச் செல்லாது ஆண்டுத் தோன்றினும், அதனைத் தனக்குரியது ஆக்கிக் கொள்ளுதலால், மாணாக்கன் கோடற்பொருள்; அன்றியும் மாணாக்கனுக்கு நூற்பொருள் உரைத்தான் என்புழிச், சொல்லுதலின் செயப்படுபொருளாகிய நூற்பொருளை அறிதலையுடைய பொருளாகிய மாணாக்கனும் கோடற்பொருளே ஆம். இன்னும், 'அவர் கொடுத்தற்கு உடம் பட்டார்' என உடம்படுதற்கு விடயமான பொருளும் ஒரு கோடல் பொருளாகவே வரும்.

கோடல் பலவகைப்படும். அவை : கேளாது ஏற்றல், கேட்டே ஏற்றல், ஏலாது ஏற்றல், ஈவோன் ஏற்றல், உயர்ந்தோன் ஏற்றல், இழிந்தோன் ஏற்றல், ஒப்போன் ஏற்றல், உணர்வின்று ஏற்றல், விருப்பாய் ஏற்றல், வெறுப்பாய் ஏற்றல் முதலின.

ஆவிற்கு நீர் விட்டான் என்பது கேளாது ஏற்றல் வறியார்க் கீந்தான் என்பது கேட்டே ஏற்றல். மாணாக்கனுக் கறிவு கொடுத்தான் என்பது ஏலாது ஏற்றல். தனக்குச் சோறிட்டான் என்பது ஈவோன் ஏற்றல். அரனுக்குக் கண்ணலர் கொடுத்தான் அரி என்பது உயர்ந்தோன் ஏற்றல் அரிக்குச் சக்கரங்கொடுத்தான் அரன் என்பது இழிந்தோன் ஏற்றல். சோழனுக்கு விருந்திட்டான் சேரன் என்பது ஒப்போன் ஏற்றல். சொற்றிற்கு நெய்விட்டான் என்பது உணர்வின்று ஏற்றல் மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆசிரியன் என்பது விருப்பாய் ஏற்றல். கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன் என்பது வெறுப்பாய் ஏற்றல். [கசை = குதிரைச் சம்மட்டி]

கொடுத்தலும் பலவகைப்படும். அவை: வழக்கத்தில்கொடுத்தல் , உரிமையில் கொடுத்தல், அச்சத்தில் கொடுத்தல், பாவனையில் கொடுத்தல், உவகையில் கொடுத்தல், வெகுளியில் கொடுத்தல், அவலத்தில் கொடுத்தல் முதலியன.

மருமகனுக்கு மகளைக் கொடுத்தான் என்பது வழக்கத்தில் கொடுத்தல். மகனுக்கு அரசு கொடுத்தான் என்பது உரிமையில் கொடுத்தல். அரசற்குத் திறை கொடுத்தான் என்பது அச்சத்தில் கொடுத்தல் தந்தை தாய்க்குத் திதி கொடுத்தான் என்பது பாவனையில் கொடுத்தல். அவனுக்குப் பரிசு கொடுத்தான் என்பது உவகையில் கொடுத்தல் , அவனுக்குத் தண்டனை கொடுத்தான் என்பது வெகுளியில் கொடுத்தல். வாய்க்கரிசி இட்டான் என்பது அவலத்தில் கொடுத்தல்.

பகை தொடர் பொருளாவது = ஒருபொருளின் இடத்துள்ள பகை தொடர்தற்கு இடமாகிய பொருளாம்.

பாம்புக்குப் பகை கருடன் என்புழிக், கருடனிடத்துள்ள பகை தொடர்தற்கு இடம் பாம்பு ஆதலால் பாம்பு பகைதொடர் பொருள்.

நட்புத்தொடர் பொருளாவது ஒரு பொருளின் இடத்துள்ள நட்புத் தொடர்தற்கு இடமாகிய பொருளாம்.

சாத்தானுக்கு நட்பாளன் கொற்றன் என்புழிக் , கொற்றன் இடத்துள்ள நட்புத் தொடர்தற்கு இடம் சாத்தன் ஆதலால் சாத்தான் நட்புத்தொடர் பொருள்.

வைவின் தீமைதொடர் பொருளும் வாழ்த்தின் நன்மை தொடர்பொருளும் பகைநேர்ச்சிகளில் அடங்கும் எனக் கொள்க. அவை :- தீயோர்க்குக் கேடு உண்டாகுக ; நல்லோர்க்குச் செல்வம் உண்டாகுக என வரும்.

தகுதியுடைப் பொருளாவது தன்னோடு பொருந்துதற்குத் தகுதியாகிய பொருளை உடைய பொருளாகும்.

அரசர்க் குரித்து அருங்கலம் என்புழி, அரசரோடு பொருந்துதற்குத் தகுதியாகிய பொருள் அருங்கலம்; அப்பொருளை உடையபொருள் அரசர் ஆதலால் அரசர் தகுதியுடைப் பொருள்.

முதல் காரண காரியப் பொருளாவது முதல் காரணத்தால் ஆகும் பொருளாகும்.

குண்டலத்திற்குப் பொன் என்புழிப், பொன் முதற்காரணம், அதனால் ஆகிய காரியம் குண்டலமாதலால் குண்டலம் முதற்காரணகாரியப் பொருள்.

நிமித்தகாரண காரியப் பொருளாவது நிமித்தகாரணத்தால் ஆகும் பொருளாம். கூலிக்கு வேலை செய்தான் என்புழி, வேலை நிமித்த காரணம்; அதனாலாகிய காரியம் கூலி ஆதலால் கூலி நிமித்த காரண காரிப்பொருள்.

முறைக்கு இயை பொருளாவது பிறப்பினால் ஒரு பொருளின் முறைக்குத் தான் இயைந்து நிற்கும் பொருளாம்.

சாத்தனுக்கு மகன் கொற்றன் என்புழிக், கொற்றன் இடத்துள்ள மகன் என்னும் முறைக்குத் தான் இயைந்து நிற்கும் பொருள் சாத்தன் ஆதலால் சாத்தான் முறைக்கு இயை பொருள்.

ஆதி என்றதனால் -மழைக்கு மின்னல் என உற்பாதத்தால் குறிக்கப்படுவதும், அவனுக்கு இது போதும் எனக் குறைவின்மையைக் கொள்வதும், பிறவும் கொள்க. [உற்பாதம் = மேல்விளையும் நன்மை தீமையை அறிவிக்கும் குறி.]

குவ்வுருபு நிற்றற்கு உரிய சில இடங்களிலே, பொருட்டு , நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆக என்பதும்சொல்லுருபுகளாக வரும். கூழின்பொருட்டு வேலை செய்தான்; கூலியின் நிமித்தம் வேலை செய்தான்; கூலிக்காக வேலை செய்தான், என வரும்.

41