எழுத்தியல்

4. பிறப்பு
பிறப்பின் பொது விதி

 
74நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நிறை உயிர் முயற்சியின் - ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால் , உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் - உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம் , உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று - மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி: இதழ் , நாப்பல் அணத்தொழிலின் - உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் , வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் - வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் , பிறப்பு - அவற்றின் பிறப்பாம் .