நுதலிப் புகுதல் - இது செய்யின் இப்படி யாகும் என்று கருதிப் புகுதலும் , ஓத்து முறை வைப்பு - இயல்களைக் காரண காரிய முறைப்படி வைத்தலும் , தொகுத்துச் சுட்டல் - பலவற்றையும் திரட்டிக் காட்டுதலும் , வகுத்துக் காட்டல் - அப்படித் திரட்டிக் காட்டப் பட்டவைகளை வெவ்வேறாகக் கூறுபடுத்துக் காட்டுதலும் , முடித்துக் காட்டல் - தான் மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டுதலும் , முடிவு இடங்கூறல் - தான் சொல்லும் இலக்கணத்திற்கு இலக்கியம் தோன்றுமிடத்தைச் சொல்லுதலும் , தான் எடுத்து மொழிதல் - பழைய சூத்திரத்தைத் தான் ஒரோ இடத்து எடுத்துச் சொல்லுதலும் , பிறன்கோட் கூறல் - தன்நூலில் பிறனது கோட்பாட்டைச் சொல்லுதலும் ; சொற்பொருள் விரித்தல் - சொல்லினது பொருள் விளங்குதற்கு உருபு முதலியவைகளை விரித்துச் சொல்லுதலும் , தொடர்ச்சொற் புணர்த்தல் - ஒன்றற்கு ஒன்று சம்பந்தமுடைய வாக்கியங்களைத் தொடுத்தலும் , இரட்டு உற மொழிதல் - ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படச் சொல்லுதலும் , ஏதுவின் முடித்தல் - முன் காரணம் விளங்கப் பெறாது ஒன்றைப் பின் காரணத்தால் முடிவு செய்தலும் , ஒப்பின் முடித்தல் - ஒன்றற்குச் சொல்லப்படும் இலக்கணம் வேறொன்றற்கும் ஒத்து வருமாயின் அதற்கு அதுவே இலக்கணமாக உடன் முடிவு செய்தலும் , மாட்டெறிந்து ஒழுகல் - ஒன்றற்குச் சொல்லப்பட்ட இலக்கணத்தை அதனைப் பெறுதற்குரிய மற்றொன்றற்கும் மாட்டிவிட்டு நடத்தலும் , இறந்தது விலக்கல் - முற்காலத்து வழங்கிய இலக்கணங்களுள்ளே பிற்காலத்து வழங்காது ஒழிந்ததை நீக்குதலும் , எதிரது போற்றல் - முற்காலத்து வழங்காது பிற்காலத்து வழங்கி வரும் இலக்கணத்தைத் தழுவிக் கொள்ளுதலும் , முன் மொழிந்த கோடல் - பின்பு வேண்டும் இடந்தோறும் எடுத்தாளும் பொருட்டு முன்னே ஒன்றனைச் சொல்லிக்கொள்ளுதலும் , பின்னது நிறுத்தல் - ஒரு பொருளுக்குக் கருவியாக முன்வைத்தற்கு உரியது அங்கே வைத்தற்கு இடம் பெறாதாயின் அப்பொருளின் பின் அதனை வைத்தலும் , விகற்பத்தின் முடித்தல் - வெவ்வேறாக முடித்தலும் , முடிந்தது முடித்தல் - வெவ்வேறாக முடிந்ததைப் புலப்படவேண்டித் தொகுத்து முடித்தலும் , உரைத்தும் என்றல் - பின்னே சொல்லப்படுவதை முன்னே ஒரு நிமித்தத்தினாலே சொல்ல வேண்டின் இதனைப் பின்னே சொல்வோம் என்பது தோன்ற அங்கே சுருக்கிச் சொல்லுதலும் , உரைத்தாம் என்றல் - முன்னே ஒரு நிமித்தத்தினாலே சொல்லப் பட்டதைப் பின்னே சொல்ல வேண்டிய இடத்து இதனை முன்னே தானே சொல்லினோம் என்பது தோன்றச் சொல்லாது விடுதலும் , ஒருதலை துணிதல் - இருவராலே விரோதமாகக் கொள்ளப்பட்ட இரண்டு பக்கத்துள் ஒரு பக்கம் துணிதலும் , எடுத்துக்காட்டல் - தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதலும் , எடுத்த மொழியின் எய்த வைத்தல் - தான் சொல்லும் இலக்கணத்தைத் தான் எடுத்துக் காட்டிய இலக்கியத்திலே பொருந்த வைத்தலும் , இன்னது அல்லது இது என மொழிதல் - சந்தேகிக்க நின்ற இடத்து இப்படிப்பட்டது அல்லாதது இதுவெனச் சொல்லுதலும் , எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் - சொல்லாது விடப்பட்டவைக்குச் சொல்லப்பட்டதனால் இலக்கணம் பொருந்தச் சொல்லுதலும் , பிறநூல் முடிந்தது தான் உடன்படுதல் - பிற நூலிலே முடிந்த முடிபைத் தான் அங்கீகரித்தலும் , தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல் - தான் புதிதாகக் குறித்து வழங்குவதைப் பல இடங்களிலும் எடுத்துச் சொல்லுதலும் , சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் - சொல்லின் முடிவிலே அதன் பொருளையும் முடித்தலும் , ஒன்றினம் முடித்தல் தன் இனம் முடித்தல் - விதியால் ஒற்றுமைப் பட்டவைகளை ஒருங்கு கூட்டி முடித்தல் ஒன்றைச் சொல்லும் இடத்து அதற்கு இனமாகிய மற்று ஒன்றையும் அதனோடு முடித்தலும் , உய்த்து உணர வைப்பு - சில சூத்திர விதிகளைக் கொண்டு ஆராய்ந்தறியும்படி ஒரு பொருளை வைத்தலும் , என உத்தி எண்ணான்கு - எனத் தந்திர உத்திகள் முப்பத்திரண்டாம் . ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் இரண்டும் ஓர் உத்தி , இம் முப்பத்திரண்டேயன்றி , உரை யிற்கோடல் , மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாத அதனையும் முட்டின்று முடித்தல் , உடம்பொடு புணர்த்தல் , ஏற்புழிக் கோடல் எனப் பிறவும் உள எனக்கொள்க . முன் சொல்லிய மதங்களுக்கும் உத்திகளுக்கும் உதாரணம் இந் நூலின் உள்ளே பின் வரும் இடந்தோறும் காட்டப்படும் .
|