பெயரியல்

வேற்றுமை
விளி உருபு ஏலாப் பெயர்கள்

 
314நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர
வை துத் தாந்தா னின்னன விளியா.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நுவ்வோடு வினாச்சுட்டு உற்ற னளர = நுவ்வுடனே மூன்று முதல் வினாவையும் மூன்று சுட்டையும் முறையே பொருந்திய ன , ள , ர என்னும் மூன்று ஈற்று உயர்திணைப்பெயர்களும், வை து = வை , து என்னும் இரண்டு ஈற்று அஃறிணைப் பெயர்களும், தான் = தான் என்னும் பொதுப்பெயரும், இன்னன = இவை போல்வன பிறவும், விளியா = விளிக்கப்படுவன அல்ல.

வைது என்னும் இரண்டும் நுவ்வொடு பொருந்தா என்பார் , ஒடுக்கொடுத்துப் பிரித்தார்.

மகர ஈற்றுப் பொதுப்பெயர் முன்னரே விலக்கப்பட்டமையால், இங்கே தாம் என்றது அசைநிலை.

நுமன், நுமள், நுமர் எனவும் , எவன், எவள், எவர், எவை, எது எனவும், யாவன், யாவள், யாவர், யாவை, யாது எனவும், ஏவன் , ஏவள் ஏவர், ஏவை, ஏது எனவும், அவன், அவள் அவர், அவை, அது எனவும், இவன், இவள் இவர், இவை, இது எனவும் , உவன், உவள், உவர், உவை, உது எனவும், தான் எனவும் வரும் இப்பெயர்கள் விளி ஏலாமை காண்க.

இன்னன என்றதனால், மற்றையான், மற்றையாள், மற்றையார் , மற்றையது, மற்றையன, மற்றையவை , பிறன், பிறள், பிறர், பிறிது, பிற முதலியனவும் கொள்க.