Try error :java.sql.SQLException: Closed Resultset: next
பொதுப்பாயிரம்

1. நூலினது வரலாறு
நூல் இன்னது என்பது

 
4நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நூலின் இயல்பு நுவலின் - நூலினது வரலாற்றைச் சொல்லின் ; ஓரிரு பாயிரம் தோற்றி - இருவகைப் பாயிரத்தையும் முன்னுடைத்தாகி , மும்மையின் ஒன்றாய் - மூவகை நூலுள் ஒன்றாகி , நாற்பொருட் பயத்தோடு - நான்கு பொருளாகிய பிரயோசனத்தோடு கூடி , எழு மதம் தழுவி - எழுவகை மதத்தையுந் தழுவி , ஐயிரு குற்றமும் அகற்றி - பத்துக் குற்றத்தையும் ஒழித்து , அம்மாட்சியோடு- பத்தழகுடனே , எண்ணான்கு உத்தியின் - முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு , ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் - ஓத்தும் படலமுமென்று சொல்லப்படும் இருவகை அவயவத்தோடு , சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடைபெறும் - சூத்திரமும் காண்டிகையுரையும் விருத்தியுரையுமாகிய வேறு பாட்டு நடைகளைப் பெற்று வரும் .