உக்குறள் உயிர் வரின் மெய் விட்டு ஒடும் - குற்றியலுகரம் உயிர் முதன் மொழி வந்தால் தனக்கு இடமாகிய மெய்யை விட்டுக் கெடும் , ய வரின் இய்யாம் - யகரம் முதன் மொழி வந்தால் அது இகரமாகத் திரியும் , முற்றும் அற்று ஒரோ வழி - முற்றியலுகரமும் அவ் விரு விதியும் பெறும் ஒவ்வோரிடத்து . 1 . நாகு , எஃகு , வரகு , கொக்கு, குரங்கு , தெள்கு இவற்றின் முன் , அரிது , அருமை முதலிய உயிர் முதன் மொழிகளை வருவித்து , நா கரிது , நா கருமை எனக் கூட்டி , இரு வழியும் உயிர் வரக் குற்றியலுகரம் தான் ஏறி நின்ற வல்லின மெய்யை விட்டுக் கெடுதல் காண்க . குற்றியலுகரம் கெட நின்ற மெய்யின் மேல் வந்த உயிரேறுதல் " உடன்மேல் உயிர் " ( சூ. 204 ) என்னும் சூத்திரத்தால் பெறப்படும் . 2 . நாகு முதலியவற்றின் முன் , யாது , யாப்பு என வருவித்து நாகி யாது , நாகி யாப்பு எனக் கூட்டி , இரு வழியும் யகரம் வரக் குற்றியலுகரம் இகரமாகத் திரிதல் காண்க . 3. கதவு + அழகிது = கதவழகிது ; கதவு + யாது = கதவி யாது எனவும் , அது + ஐ = அதை எனவும் முற்றியலுகரம் ஒரோரிடத்து அவ்விரு விதியும் பெறுதல் காண்க . கெடும் என்னாது ஒடும் என்றாமையால் , குற்றியலுகரம் ஒரோர் இடத்து " இ ஈ ஐ வழி " ( சூ . 162 ) என்னும் சூத்திரப் பொதுவிதி பெறுதலும் கொள்க . வரலாறு:- "தன்முக மாகத் தானழைப் பதுவே " இதில் " 'அழைப்பது ' என்பது குற்றுகர மொழி , ஏகார இடைச் சொல் வர ' அழைப்பதே ' என முடிதற்பாலது , அங்ஙனம் முடியாது வகரவுடம்படுமெய்பெற்று, ' அழைப்பதுவே ' என முடிந்தது . " அடித்தடித்து வக்காரமுன் றீற்றிய வற்புத மறியேனே " இதில் ' அடித்து ' என்பது குற்றுகர மொழி , அக்கார மென்னும் உயிர் முதன் மொழி வர , ' அடித்தக்காரம் ' என முடிதற்பாலது , அங்ஙனம் முடியாது , வகரவுடம்படுமெய் பெற்று , ' அடித்து வக்காரம் ' என முடிந்தது . குற்றியலுகரம் உயிர் வரிற் கெடும் என்றது ' இ ஈ ஐ வழி ' என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் ; யவ் வரின் இய்யாம் என்றது எய்தாதது எய்துவித்தல் . ஒரோவிடத்து முற்றியலுகரம் இவ்விதி இரண்டனுள் முன்னையது பெறும் என்றது " இ ஈ ஐ வழி " என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி ; பின்னையது பெறும் என்றது எய்தாதது எய்துவித்தல் .
|