உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட டகரம் மருவும் = உரி என்னும் அளவுப்பெயர் வரின், நாழி என்னும் அளவுப்பெயரினது ஈற்றிலுள்ள ழிகரவுயிர் மெய் நீங்க டகர மெய் வரும் , உரியின் வழி யகரவுயிர் மெய் ஆம் ஏற்பன வரின் - உரி என்னும் அளவுப்பெயரின் பின் யகர உயிர் மெய் வரும் அவ் உயிர்மெய் வருவதற்கு ஏற்ற வருமொழிகள் வருமாயின் . 1. நாழி + உரி = நாடுரி என நாழியின் ஈற்றுயிர் மெய் கெட்டு டகரந் தோன்றிற்று ; இது நாவுரி என இக்காலத்து மருவிற்று . 2. உரி + உப்பு = உரியவுப்பு , உரியபயறு , உரியமிளகு , உரிய வரகு என உரியின் பின் யகர உயிர்மெய் வந்தது. 'ஏற்பன வரின் ' எனவே, ஏலாதன வரின் உரியரிசி, உரியாழாக்கு, உரியெண்ணெய் எனப் பொதுவிதி பெறுதல் கொள்க . ஆழாக்கு இரண்டு கொண்டது உழக்கு ; உழக் கிரண்டு கொண்டது உரி ; உரி இரண்டு கொண்டது நாழி. 'உரி வரின் நாழியின் ஈற்றுயிர்மெய் கெட டகர மருவும்' என்றது ' இ ஈ ஐ வழி ' என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் ; 'உயிரின் வழி யகர வுயிர் மெய்யாம் ஏற்பன வரின்' என்றது எய்தாதது எய்துவித்தல்.
|