உருபின் முடிபவை - மேல் உருபு புணர்ச்சிக்கண் முடியும் முடிபுகள் , அப்பொருளினும் ஒக்கும் - அவ்வுருபின் பொருள் புணர்ச்சிக்கண்ணும் ஒத்து முடியும். உருபு புணர்ச்சியாவது வேற்றும்மை உருபு வெளிப்பட்டு நிற்பப் புணரும் புணர்ச்சி , உறிக்கட்டயிர் என்பது போல. வேற்றுமைப் பொருள் புணர்ச்சியாவது வேற்றுமை உருபின்றி அவ் உருபினது பொருள்படப் புணரும் புணர்ச்சி உறித்தயிர் என்பது போல. 1. எல்லாவாற்றதும் என்பது உருபு புணர்ச்சி , எல்லாவற்றுக்கோடும் என்பது பொருட் புணர்ச்சி மேல் உருபு புணரியலில் , " எல்லா மென்ப திழிதிணை யாயின் அற்றோ டுருபின் மேலும் முறுமே " (சூ. 245) என்ற விதிப்படி எல்லாவற்றதும் என்ற உருபு புணர்ச்சிக்கு அஃறிணைக்கண் அற்றும் உருபின் மேல் உம்மும் பெற்றாற் போல எல்லாவற்றுக் கோடும் என்னும் பொருள் புணர்ச்சிக்கும் பெற்றன. எல்லா நமதும் என்பது உருபு புணர்ச்சி; எல்லா நங்கையும் என்பது பொருள் புணர்ச்சி. " அன்றே னம்மிடை யடைந்தற் றாகும் " (சூ. 245) என்ற விதிப்படி எல்லா நமதும் என்னும் உருபு புணர்ச்சிக்கு உயர்திணைக்கண் நம்மும் உருபின்மேல் உம்மும் பெற்றாற் போல, நங்கையும் என்னும் பொருள் புணர்ச்சிக்கும் பெற்றன. 2. எல்லார் தமதும், எல்லீர் நுமதும் என்பன உருபு புணர்ச்சி; எல்லார் தங்கையும், எல்லீர் நுங்கையும் என்பன பொருள் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில், " எல்லாரு மெல்லீரு மென் பவற்றும்மை - தள்ளி நிரலே தம்நும் சாரப் - புல்லு முருபின் பின்ன ரும்மே " ( சூ. 246) என்ற விதிப்படி எல்லார் தமதும் எல்லீர் நுமதும் என்னும் உருபு புணர்ச்சிக்கு எல்லாரும் எல்லீரும் என்பவைகளின் இறுதியிலுள்ள முற்றும்மைகளைத் தள்ளி முறையே தம்முச் சாரியையும் நும்முச் சாரியையும் வந்து பொருந்த அவைகளினாலே தள்ளுண்ட முற்றும்மைகள் உருபுகளின் பின்னே வந்து புணர்ந்தாற்போல, எல்லார் தங்கையும் எல்லீர் நுங்கையும் என்னும் பொருள் புணர்ச்சிக்கும் முடிந்தன. 3. தனது, தமது, நமது என்பன உருபு புணர்ச்சி; தன்கை, தங்கை, நங்கை என்பன பொருள் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில், " தான்தாம் நாம்முதல் குறுகும் " ( சூ. 247) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்குத் தான், தாம், நாம் என்பன முறையே தன், தம், நம் என விகாரப்பட்டால் போலப் பொருள் புணர்ச்சிக்கும் விகாரப்பட்டன. எனது, எமது, நினது, நுமது என்பன உருபு புணர்ச்சி; என்கை, எங்கை, நின்கை, நுங்கை என்பன பொருள் புணர்ச்சி. " யான் யாம் நீ நீர் என் நின் நும் ஆம் " (சூ. 247) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு யான் யாம் நீ நீர் என்பன முறையே என் எம் நின் நும் என விகாரப்பட்டால் போலப் , பொருள் புணர்ச்சிக்கும் விகாரப்பட்டன. 4.. ஆனது, மானது, கோனது என்பன உருபு புணர்ச்சி; ஆன்கோடு, மான்கோடு, கோன் குணம் என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில். " ஆமா கோனவ் வணையவும் பெறுமே" (சூ. 248) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு னகரச் சாரியை வந்தால் போலப் பொருள் புணர்ச்சிக் கும் வந்தது. 5. அவற்றது, இவற்றது, உவற்றது என்பன உருபு புணர்ச்சி; அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு என்பன பொருள் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில், " வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே " (சூ.250) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு அற்றுச் சாரியை வந்தால் போலப் பொருள்புணர்ச்சிக்கும் வந்தது. 6. அதனது, இதனது, உதனது என்பன உருபு புணர்ச்சி; அதன்கோடு, இதன்கோடு, உதன் கோடு என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில், " சுட்டின்முன் ஆய்தம் அன்வரிற் கெடுமே" (சூ. 251) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு அன் சாரியைப் பேறும் ஆய்தக் கேடும் வந்தால் போலப், பொருள் புணர்ச்சிக்கும் வந்தன. இவை போல்வன பிறவும் இப்படியே முடித்துக் கொள்க.
|