பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
உம்மைத்தொகைக்குப் புறனடை

 
372உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உயர்திணை உம்மைத்தொகை = உயர்திணை ஒருமையில் வரும் உம்மைத்தொகைகள் ஆனவை , பலர் ஈறே = ரவ்வொற்றும் கள்ளும் ஆகிய பலர்பால் விகுதியை உடையனவேயாம்.

கபிலபரணர், கல்லாடமாமூலர், சேர சோழ பாண்டியர், தேவன் தேவிகள் என வரும் . னகர ஈறு இடையே கெடுதல் " சில விகாரமா முயர்திணை " என்பதனாலும், இறுதிக்கண் கெடுதல் இதனுள்

" பலரீறே " என்பதானாலும் கொள்க. பலரீறே என்னும் தேற்றத்தால், அஃறிணை ஒருமையில் வரும் உம்மைத்தொகைகளும் பொதுத்திணை ஒருமையில் வரும் உம்மைத் தொகைகளும் தத்தம் பன்மை ஈறாகவே வரல் வேண்டும் என்னும் நியதி இன்றி உண்மை இன்மைகள், உண்மை இன்மை, இராப்பகல்கள், இராப்பகல் எனவும், தந்தை தாயர் தந்தைதாய்கள், தந்தை தாய் , சாத்தன் சாத்தியர், சாத்தன் சாத்திகள்,சாத்தன் சாத்தி எனவும் பன்மை ஈற்றாலும் இயல்பாய ஒருமை ஈற்றாலும் வரும் என்பதாயிற்று இயல்பாகிய ஒருமை ஈற்றால் வந்தன ஆயின் , உம்மைத்தொகை ஆகாது. கபிலன் பரணன் இருவரும் வந்தார் என்றால் போலச் செவ் எண்ணாம் அன்றோ எனின், பல மொழிகளையும் திரட்டி ஒரு பிண்டமாகக் கூறிய போது உம்மைத்தொகையாகவும், பிளவுபடக் கூறிய போது செவ் எண்ணாகவும் கொள்ளப்படும் என்க.

21