பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
திணை வழுவமைதி

 
377உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறும் = உயர்திணை எழுவாயைத் தொடர்ந்த அஃறிணைப் பொருளாதி ஆறும், அதனொடு சார்த்தின் - அவ் உயர்திணையோடு சேர்த்து முடிக்கின் , அத்திணை முடிபின = அவ் உயர்திணை முடிபின ஆம்.

தொடர்தலாவது அஃறிணைப் பொருளாதி ஆறும் உயர்திணைக்குக் கிழமைப் பொருள்களாய் நிற்றல். சார்த்தலாவது உயர்திணை எழுவாயின் பயனிலையோடு அஃறிணையெழுவாயையும் உடன் முடித்தல்.

நம்பி பொன் பெரியன்
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூடிக்கு கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன்
-- இங்கே உயர்திணை எழுவாயின் பயனிலையோடு அஃறிணை எழுவாயும் முடிந்தது அறிக.

"சொற்றொறு மிற்றிதன் பெற்றி" என்பதனாலே. கிணறு நீரூறிற்று, மாடு கோடு கூரிது என அஃறிணையோடு சேர்ப்பின், அஃறிணை முடிபின ஆதலும் கொள்க.

சார்த்தின் எனவே, சார்த்தாவிடின், வழாநிலையாக, நம்பிக்குப் பொன் பெரிது, மூக்குக் கூரிது எனத் தம் முடிபு கொள்ளும் என்க.

பொன் என்னும் அஃறிணை எழுவாய், நம்பி என்னும் உயர்திணை எழுவாயினது பயனிலையாகிய பெரியன் என்னும் உயர்திணை வினையைக் கொண்டு முடிதலால் வழு ஆகித் , தொடர்பு உண்டாயிருத்தல்பற்றிச் சார்த்தி முடித்தலால் வழு அமைதி ஆயிற்று.