உருவக உவமையில் = உருவகத்திலும் உவமையிலும் , திணை (பிறழ்தலும்) - உயர் திணை அஃறிணை தம்முள் மயங்குதலும் , சினை முதல்கள் பிறழ்தலும் = சினைமுதல் தம்முள் மயங்குதலும் , பிறவும் = இவ்வியலுள் சொல்லாது ஒழிந்தவையும் , பேணினர்கொளல் = பாதுகாத்துக் கொள்க. உருவகம் :- 1. நம் அரசனாகிய சிங்கத்திற்குப் பகைவர் கூட்டமாகிய யானைகள் அஞ்சி ஓடின என உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. கல்வி மங்கையை நல்லோர் விரும்புவார் என அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. 2. அவ்வரசனுக்குத் தம்பியர் இருவரும் இரண்டு தோள்கள் என உயர்திணை முதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று. முகமாகிய மதி என உயர்திணைச் சினை அஃறிணை முதலோடு மயங்கிற்று. உவமை :- 1. மயில்போலும் மங்கை என உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. நெற்பயிர்கள் கல்வி உடையார் போல் இறைஞ்சிக் காய்த்தன என அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. 2. கயல்போலும் கண் என உயர்திணைச் சினை அஃறிணை முதலோடு மயங்கிற்று. தளிர்போலும் மேனி என உயர்திணை முதல் அஃறிணைச்சினையோடு மயங்கிற்று. இனிப் பிறவும் என்றதனால், இவன் சரசுவதிக் கொப்பானவன் எனப் பால்மயங்கக் கூறுதலும், செங்கோல், வீரக்கழல் என ஒரு பொருள் தன்மையை மற்றொரு பொருள்மேல் வைத்துக் கூறுதலும் , ஈந்தான் என்பதற்கு அருளினான் என ஒருவினையை மற்றொரு வினையால் கூறுதலும் , அரசு , வேந்து என உயர்திணையை அஃறிணையாகக் கூறுதலும் பிறவும் கொள்க.
|