எழுத்தியல்

எண்
சார்பு எழுத்தின் விரி

 
61உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஒளகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உயிர்மெய் இரட்டு நூற்று எட்டு - உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு , உயர் ஆய்தம் எட்டு - முற்று ஆய்தம் எட்டு , உயிரளபு எழுமூன்று - உயிர் அளபெடை இருபத்தொன்று , ஒற்று அளபெடை ஆறேழ் - ஒற்று அளபடை நாற்பத்திரண்டு , அஃகும் இ முப்பான் ஏழ் - குற்றியல் இகரம் முப்பத்தேழு , (அஃகும்) உகரம் ஆறாறு - குற்றியலுகரம் முப்பத்தாறு , (அஃகும்) ஐகான் மூன்று - ஐகாரக் குறுக்கம் மூன்று , (அஃகும்) ஒளகான் ஒன்று - ஒளகாரக் குறுக்கம் ஒன்று , (அஃகும்) மஃகான் மூன்று - மகரக் குறுக்கம் மூன்று , (அஃகும்) ஆய்தம் இரண்டொடு - ஆய்தக் குறுக்கம் இரண்டுடனே , சார்பெழுத்து உறு விரி ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப - சார்பெழுத்தினது மிகுந்த விரி முந்நூற்று அறுபத்து ஒன்பதாம் என்று சொல்லுவர் புலவர்.

இவை இத்தனைய ஆதல் அவ்வவற்றின் பிறப்பிலக்கணத்தில் காண்க.