நூல் பயில் இயல்பு நுவலின் - நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின் , வழக்கு அறிதல் - உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும் , பாடம் போற்றல் - மூலபாடங்களை மறவாது பாதுகாத்தலும் , கேட்டவை நினைத்தல் - தான் கேட்ட பொருள்களைப் பலகால் சிந்தித்தலும் , ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் - ஆசிரியனையடுத்து அவைகளைத் தன் மனத்துள் அமையும்படி மீட்டும் கேட்டலும் , அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்- அக் கற்கும் தொழிலையுடையவரோடு பழகுதலும் , வினாதல் - தான் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும் , வினாயவை விடுத்தல் - அவர் வினாவியவைகளுக்குத் தான் உத்தரம்கொடுத்தலும் , என்று இவை கடனாக் கொளின் - என்று சொல்லப்பட்ட இச் செயல்களை முறையாக மாணாக்கன் கொண்டால் , மடம் நனி இகக்கும் - அறியாமையானது அவனை மிகுதியும் விட்டு நீங்கும். (அ.கு)*தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .
|