உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
183நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நெடில் (தொடர்) உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் - நெடில்தொடர்களும் உயிர்த்தொடர்களுமாகிய குற்றுயலுகர மொழிகளுள் , ட ற ஒற்று - அவ்வுகரப் பற்றுக் கோடாகிய வல்லொற்று ஆறனுள் டகர , றகரம் என்னும் இரண்டொற்றும் , மிக வேற்றுமை இரட்டும் - பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும் .

வரும் எழுத்தைச் சொல்லாமையால் நாற்கணமும் கொள்க .

ஆடு+ கால் = ஆட்டுக்கால் , பாறு+கால்= பாற்றுக்கால் , முருடு+கால் = முருட்டுக்கால் , முயிறு+கால் = முயிற்றுக்கால் என வரும் .

செவி , தலை , புறம் , ஞாற்சி , நிறம் , மயிர் , காப்பு , வன்மை , அடி என்பனவற்றையும் ஒட்டி , வேற்றுமையிலே ட , ற வொற்று இரட்டுதல் காண்க .

இவ்விரண்டு ஒற்றும் பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும் எனவே , சிறுபான்மை வேற்றுமையில் இரட்டாமையும் ; சிறுபான்மை அல்வழியில் இரட்டுதலும் , சிறு பான்மை இரு வழியும் பிற ஒற்று இரட்டுதலும் கொள்க .

1 . ' காவிரி புரக்கும் நாடு கிழவோனே '
' காடக மிறந்தார்க்கே நாடுமென் மனனே காண் '
' கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை '

என்பவனவற்றுள் , நாடு கிழவோன் , காடகம் , மிடறணியல் என வேற்றுமையிலே ட , ற ஒற் று இரட்டா வாயின .

2 . காடு + அரண் = காட்டரண் , ஏறு + ஏனம் = ஏற்றேனம் , வரடு + ஆடு = வரட்டாடு , குருடு + கோழி = குருட்டுக்கோழி , வெளிறு + பனை = வெளிற்றுப்பனை என அல்வழியிலே ட , ற ஒற்று இரட்டின .

3 . வெருகு + கண் = வெருக்குக்கண் , எருது + கால் = எருத்துக்கால் எனவும் ;

எருது + மாடு = எருத்து மாடு எனவும் இரு வழியும்
பிற ஒற் று இரட்டின .

ட ற வொற்று , மெய் வரின் இரட்டும் என்றது எய்தாதது எய்துவித்தல் ; "உயிர் வரின் இரட்டும் என்றது " உயிர் வரினுக்குறள் " என்னும் சூத்திரத்தால் எய்தியதன் மேல் சிறப்புவிதி .