நெடிலோடு - தனி நெடில் ஏழுடனே , ஆய்தம் - ஆய்தம் ஒன்றும் , உயிர் - சொல்லுக்கு நடுவிலும் கடையிலும் வாராத ஒளகாரம் நீங்கிய உயிர் பதினொன்றும் , வலி - வல்லெழுத்து ஆறும் , மெலி - மெல்லெழுத்து ஆறும் , இடை - வல்லெழுத்துக்களோடு தொடராத வகரம் நீங்கிய இடை எழுத்து ஐந்தும் ஆகிய முப்பத்தாறனுள் ஒன்றினாலே , தொடர் - ஈற்றுக்கு அயல் எழுத்தாகத் தொடரப் பட்டு , மொழி இறுதி வன்மை ஊர் உகரம் - சொல்லின் இறுதியில் வல்லெழுத்துக்களுள் யதாயினும் ஒன்றன் மேல் ஏறி வரும் உகரமானது , அஃகும் - தன் மாத்திரையில் குறுகும் , பிற மேல் தொடரவும் பெறும் - இவற்றுள் ஆய்தத்தொடர் முதலிய ஐந்து தொடரும் , வன்மை ஊர் உகரத்தை ஈற்று அயலெழுத்துத் தொடர்தலே அன்றிப் பிற எழுத்துக்களுள் ஒன்றும் பலவும் அவ் ஈற்று அயலெழுத்தின் மேலே தொடரவும் பெறும் . ' நெடிலோடு ' என நெடிலை ஒடுக் கொடுத்துப் பிரித்தார் , பிற மேல் தொடர்தல் அதற்கு இல்லையென்பது தோன்றுதற்கு என்க , பிறமேல் தொடரின் உயிர்த்தொடர் எனப்படும் , உயிர் என்பது குறில் நெடில் இரண்டையும். நாகு , காசு , நீறு என்பன நெடில் தொடர்க் குற்றியலுகரம் . எஃகு கஃசு இருபஃது என்பன ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் . வரகு , பலாசு , கயிறு , போவது , ஒன்பது , இறும்பூது என்பன உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் . கொக்கு , கச்சு , பற்று , பிண்ணாக்கு , விளையாட்டு , குருத்து என்பன வன்தொடர்க் குற்றியலுகரம் . சங்கு , பஞ்சு , அம்பு , கன்று , பட்டாங்கு , சுண்ணாம்பு என்பன மென்தொடர்க் குற்றியலுகரம் . வெய்து , சால்பு , தெள்கு என்பன இடைத்தொடர்க் குற்றியலுகரம். இங்கே ஈற்று அயலெழுத்தைக் கொண்டு குற்றியலுகரத்தை அறு வகையாகச் சொல்லியது , பின்னே புணரியலில் எடுத்து ஆளுதற் பொருட்டு என்க, இது முன்மொழிந்து கோடல் என்னும் உத்தி . மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியால் , நுந்தை என்னும் முறைப்பெயரின் முன் நின்ற நகர மெய்யின் மேல் ஏறி நிற்கும் உகரமும் குறுகும் எனக் கொள்க , ( மெல்லின மெய்யின் மேலும் இடையின மெய்யின் மேலும் ஏறி நிற்கும் உகரமும் , தனிக் குற்றெழுத்தினாலே தொடரப் பட்ட வல்லின மெய்யின் மேல் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம் ) .
|