பகுப்பால் பயன் அற்று-பிரிக்கப்படுதலினாலே பகுதி விகுதி முதலாகிய பயனில்லாமல் , இடுகுறி ஆகி முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற-காரணமின்றி இடப்பட்ட குறியாகிப் படைப்புக் காலந்தொட்டு ஒன்றாகி முடிந்து நடக்கின்ற , பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் - பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய நான்கும் பகாப்பதங்களாம் . நிலம் , நீர் , நெருப்பு , காற்று என்பன பெயர்ப் பகாப்பதம் . நட , வா , உண் , தின் என்பன வினைப் பகாப்பதம் . மன் , கொல் , போல் , மற்று என்பன இடைப் பகாப்பதம் . உறு , கழி , நனி , தவ என்பன உரிப் பகாப்பதம் .
|