பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும்-முதனிலையும் இறுதிநிலையும் இடை நிலையும் சாரியையும் சந்தியும் விகாரமும் ஆகிய இவ்வாறு உறுப்பினுள்ளும் , ஏற்பவை முன்னிப் புணர்ப்ப - பொருளமைதிக்கு ஏற்பவைகளை நினைத்து அறிவுடையோர் கூட்டி முடிக்க , எப்பதங்களும் முடியும்-எவ்வகைப் பட்ட பகுபதங்களும் முடிவு பெறும் . கூனி என்பது கூன்+இ எனப் பகுதி விகுதியால் முடிந்தது . உண்டான் என்பது உண்+ட்+ஆன் என அவ்விரண்டுடன் இடைநிலை பெற்று முடிந்தது . உண்டனன் என்பது உண்+ட்+அன்+அன் என அம் மூன்றுடன் சாரியை பெற்று முடிந்தது . பிடித்தனன் என்பது பிடி+த்+த்+அன்+அன் என அந் நான்குடன் சந்தி பெற்று முடிந்தது . நடந்தனன் என்பது நட+த்+த்+அன்+அன் என அவ்வைந்தும் பெற்றுச் சந்தியால் வந்த தகர வல்லொற்று மெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று முடிந்தது . பதப் புணர்ச்சிக்கு விதிக்கப்பட்ட தோன்றல் முதலாய மூன்று புணர்ச்சி விகாரங்களையும் வலித்தல் முதலாகிய ஓன்பது செய்யுள் விகாரங்களையும் இது பெறுமென மாட்டுதலால் , இது மாட்டெறிந்தொழுகல் என்னும் உத்தி .
|