பதவியல்

இடைநிலை
எதிர்காலவினை இடைநிலை

 
144பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு
திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ப வ - பகர மெய்யும் வகர மெய்யும் , ஐம்பால் மூவிடத்து எதிர்பொழுது இசை வினை இடைநிலை ஆம் - ஐம்பால் மூவிடங்களிலும் எதிர்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலைகளாகும் , இவைசில இல - இம் முக்கால இடைநிலைகளும் சிலமுற்று வினையெச்சவினைகட்கு இலவாம் .

நடப்பான் வருவான் என வரும்.

மற்றைப் பால் இடங்களிலும் ஒட்டிக்கொள்க.

இவை சிலவில எனவே , காலத்தை விகுதியாயினும் பகுதியாயினும் வேறு இடை நிலையாயினும் காட்டும் என்பது பெற்றாம் , அவை பின்வரும் சூத்திரத்திற் காண்க.