பலசில எனும் இவை தம்முன் தாம்வரின் = பல, சில என்னும் இவ்விரு சொல்லும் தமக்கு முன்னே தாம் வருமாயின் , இயல்பும் மிகலும் = இயல்பாதலும் மிகுதலும் , அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும் - அகரம் கெட லகரம் றகரமாகத் திரிதலும் , பிற வரின் அகரம் விகற்பம் ஆகலும் உள - இவற்றின் முன் பிற மொழிகளுள் யாதாயினும் ஒன்றுவரின் அகரம் நிற்றலும் நீங்கலும் உளவாம் . 1. பலபல, சிலசில என இயல்பாயின. 2. பலப்பல, சிலச்சில என மிக்கன. 3. பற்பல, சிற்சில என அகரம்கெட லகரம் றகரமாயிற்று. 4. பலகலை, பல்கலை ; பலசாலை, பல்சாலை ; பலதாழிசை, பஃறாழிசை ; பலபடை, பல்படை ; பலஞானம், பன்ஞானம் ; பலநாள், பன்னாள் ; பலமணி, பன்மணி ; பலவளை, பல்வளை ; பலயாழ் . பல்யாழ் ; பலவணி, பல்லணி ; பலவாயம், பல்லாயம் எனப் பிற வர அகரம் விகற்பம் ஆயிற்று . பிற என்ற மிகையினாலே, பல்பல சில்சில என அகரம் கெட லகரம் றகரம் ஆகாது ஒரோ இடத்து அருகி வருதலும், இன்னும் , அகர ஈற்றுப் புணர்ச்சியுள் அடங்காது வருவனவும் கொள்க . "பலசில வெனும் இவை தம் முன்தாம் வரி னியல்பு" என்றது, வருமொழிக்குச் " செய்யிய " என்னும் சூத்திரத்தால் (சூ. 167) எய்தியது இகந்துபடாமைக் காத்தல் ; மிகல் என்றது, அதன் மேற் சிறப்பு விதி ; இம் மிகுதல் " செய்யிய " என்னும் சூத்திரத்தால் விலக்கி இங்கே விதித்தமையால் சிறப்புவிதி ; அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும் பிறவரின் அகரம் விகற்பமாதலும் உள என்றது நிலைமொழிக்கு எய்தாதது எய்துவித்தல்
|