உயிரீற்றுப் புணரியல்

ஈகார வீற்றுச் சிறப்புவிதி

 
178பவ்வீ நீமீ முன்ன ரல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி இயல்பு ஆம் = பகர மெய்யின் மேல் ஏறி நின்ற ஈகார ஈற்று இடக்கர்ப் பெயரும் நீ என்னும் முன்னிலைப் பெயரும் மீ என்னும் மேலாகிய பண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் பெயருமாகிய இம்மூன்றன் முன்னும் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும் , மீக்கு வலி ( மிகலும் ஆம் ) மெலி மிகலும் ஆம் = இவற்றுள்ளே மீ என்னும் சொற்கு முன் வல்லெழுத்து மிகுதலும் ஆகும் மெல்லெழுத்து மிகுதலும் ஆகும்.

1. பீ குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்,
நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும்,
மீகண் எனவும் இயல்பாயின.

2. மீக்கூற்று, மீக்கோள் என எய்தியதிகந்து
படாமல் வலி மிக்கது ;
மீந்தோல் என மெலி மிக்கது.

மீகண் என்பது, கண்ணினது மேலிடம் எனப் பொருள் தந்து நிறகுமாயினும், வருமொழி நிலைமொழியாக மாறி நின்றதனால், இலக்கணப்போலியாய், அல்வழி ஆயிற்று.

மீக்கூற் றென்பது புகழ் ; அது மேலாய சொல்லால் பிறந்தது எனப் பொருள்படும் . மீக்கோள் என்பது மேல் போர்வை ; அது சரீரத்தின்மேல் கொள்ளப்படுவது எனப் பொருள்படும். மீந்தோல் என்பது மேற்றொல் ; இது இக்காலத்துப் பீந்தோல் என மருவிற்று.

நீஎன்னும் பொதுப்பெயர், அவ்வழியிலே நீ என்றும் வேற்றுமையிலே நின் என்றும் நிற்கையினாலே, 'பொதுப்பெயருயர் திணைப் பெயர்' என்னும் சூத்திரத்துள் அடங்கவில்லை.

'பவ்வீ, நீ, மீ, முன்னர் அல்வழி யியல்பாம்' என்றது ஒருவழி ' இயல்பினும் விதியினும் ' என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கல் ; மீக்கு முன் வலி மிகலாம் என்றது அச்சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைக் காத்தல் ; மீக்கு முன் மெலி மிகலாம் என்றது அச்சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்.