உயிரீற்றுப் புணரியல்

ஐகார வீற்றுச் சிறப்புவிதி

 
203பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும்
அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பனை முன் - பனை என்னும் பெயர் முன், கொடிவரின் மிகலும் - கொடி என்னும் பெயர் வருமாயின் வந்தது மிகுதலும் , வலி வரின் ஐ போய் அம்மும் - க, ச, த பக்கள் வருமாயின் நிலைமொழி ஈற்று ஐகாரங் கெட்டு அம்முப் பெறுதலும் , திரள் வரின் உறழ்வும் -திரள் என்னும் பெயர் வருமாயின் வந்தது மிகுந்தும் ஐ போய் அம்முப் பெற்றும் விகற்பித்தலும் , அட்டு உறின் ஐ கெட்டு அந் நீள்வும் - அட்டு என்னும் பெயர் வருமாயின் ஐகாரங் கெட்டு வரு மொழி அகரம் ஆகாரம் ஆதலும் , ஆம் வேற்றுமை - ஆகும் வேற்றுமைக்கண்.

பனைக்கொடி எனவும்,
பனங்காய், செறும்பு, தூண், பழம், எனவும்,
பனைத்திரள், பனந்திரள் எனவும்,
பனாட்டு எனவும் வரும்.

பனைக்கொடி = பனையை எழுதிய கொடி. பனாட்டு = பனையினது தீங்கட்டி.

பனை முன் கொடி வரின் மிகும் என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியது இகந்து படாமைக் காத்தல் , வலி வரின் ஐ போய் அம்முப் பெறும் என்றது "வேற்றுமையாயின்" , என்னும் மேலைச் சூத்திரத்தால் எய்திய திகந்துபடாமைக் காத்தல் , திரள் வரின் உறழ்வாம் என்றது "இயல்பினும்" என்பதனாலும் மேலைச் சூத்திரத்தாலும் எய்தியது இகந்துபடாமைக் காத்தல்; அட்டுறின் ஐ கெட்டு அந் நீள்வும் என்றது "இ ஈ ஐ வழி" என்பதனால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்.

உயிரீற்றுப் புணரியல் முற்றிற்று .