பதம் முன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி - பதத்தின் முன் இறுதி நிலையாவது பதமாவது உருபாவது புணருமிடத்து , சாரியை ஒன்றும் (சாரியை ) பலவும் - ஒரு சாரியையாயினும் பல சாரியையாயினும் , வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும் - வருதலும் வாராது ஒழிதலும் இவ்விரண்டுமாகிய விகற்பமும் ஆகும் . 1 . நடந்தனன் எனவும் , நடந்தான் எனவும் , நடந்தன , நடந்த எனவும் , விகுதிப் புணர்ச்சியுள் சாரியை வேண்டியும் வேண்டாதும் , விகற்பித்தும் வந்தன . 2 . புளியங்காய் எனவும் , புளிக்கறி எனவும் , நெல்லின் குப்பை , நெற்குப்பை எனவும் பதப் புணர்ச்சியுள் சாரியை அவ்வாறாயின . 3. அவற்றை எனவும் , தன்னை எனவும் , ஆனை , ஆவை எனவும் உருபு புணர்ச்சியுள் சாரியை அவ்வாறாயின . 4 . ஆவினுக்கு , மரத்தினுக்கு - இவைகளிலே சாரியை பல வந்தன.
|