படர்க்கை வினைமுற்று (படர்க்கை) நாமம் குறிப்பின் = படர்க்கை வினைமுற்றுச் சொல்லையும் படர்க்கைப் பெயர்ச்சொல்லையும் முன் குறித்தால் , திணைபால் அனைத்தும் பெறப்படும் = பின் அவ் இருவகைச் சொல்லும் கருவியாக இருதிணையும் ஐம்பாலும் பெறப்படும் . ஏனை இடத்து (வினைமுற்று நாமம் குறிப்பின் ) = ஒழிந்த தன்மை முன்னிலைகளின் வினைமுற்றுச் சொல்லையும் பெயர்ச்சொல்லையும் முன் குறித்தால் , அவற்று ஒருமைப்(பால்) பன்மைப்பால்(பெறப்படும்) = பின் அந்நால்வகைச் சொல்லும் கருவியாக இருதிணை ஐம்பாலுள் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் பெறப்படும் . (1) நடந்தான் , நடந்தாள் , நடந்தார் , நடந்தது , நடந்தன ' எனவும் , ' அவன் , அவள் , அவர் , அது , அவை , எனவும் , படர்க்கை வினைமுற்றுச் சொல்லும் , படர்க்கைப் பெயர்ச் சொல்லும் , முன்பு தம்மை உணர்த்திப் பின்பு இருதிணை ஐம்பால் பொருளையும் உணர்த்தின . (2) நடந்தேன் , நடந்தேம் எனவும் , யான் , யாம் , எனவும் தன்மை வினைமுற்றுச் சொல்லும் தன்மைப் பெயர்ச்சொல்லும் , நடந்தாய் , நடந்தீர் எனவும் , நீ , நீர் எனவும் முன்னிலை வினைமுற்றுச் சொல்லும் முன்னிலைப் பெயர்ச்சொல்லும் முன்னே தம்மை உணர்த்திப் பின்பு இருதிணை ஐம்பாலுள் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தின. மூ இடங்களுள் ஒன்றற்குரிய வினைமுற்றும் பெயரும் தம்மையும் பொருளையும் இப்படி உணர்த்தும் எனவே , இவ்விடங்களுக்குப் பொதுவாகிய வினைமுற்றுக்களும் பெயர்களும் பொதுமை நீங்கி ஒரிடத்திற்கு உரியவாகியும் , எச்சவினை முதலியனவும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர்வினைகளைச் சார்ந்தும் , இப்படியே தம்மையும் பொருளையும் உணர்த்தும் எனக் கொள்க.
|