பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல்போல் = தோல், இரத்தம் , இறைச்சி மேதை, எலும்பு , மச்சை , சுவேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்களினால் உயிர்க்கு இடமாக இயற்றப்பட்ட உடம்பு போல, பல சொல்லால் பொருட்கு இடன் ஆக - இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களால் பொருளுக்கு இடமாக, உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் - கல்விஅறிவினால் செய்யுள் செய்ய வல்லவர் அலங்காரம் பெறச்செய்வன செய்யுளாம் . இப்படிச் சொல்லவே , எழுத்தால் ஆனது சொல் ஆதலால் , எழுத்துச் சொல்பொருள் , அணி நான்கினாலும் உண்டாவது செய்யுள் என்பதாயிற்று . "வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்த லெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாய நும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங்குழையே. இக் கட்டளைக் கலித்துறை , இடம் அணித்தென்னும் பொருளுக்கு இடமாகித் , தன்மை உவமை உருவக அணிகளும் பிறவும் உடைத்தாய் , வருதல் காண்க.
|